மும்பை,
மும்பை மேற்கு  கடற்படையில் நிதி பரிவர்த்தனையில் ரூ.7கோடி ஊழல் நடைபெற்றிருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஊழல் ஒழிந்து விட்டது என்று பாஜக பரிவாரங்கள் மார்தட்டி வருகின்றன. குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் எல்லாமே டிஜிட்டல் மயமாகியிருக்கிறது. அதனால் இனி யாரும் ஊழலில் ஈடுபடமுடியாது என புதுப்புது விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிலையில் டிஜிட்டல் முறையில் சர்வசாதாரணமாக நடக்கும் ஊழலின் ஒரு பகுதியாக மும்பை கடற்படையில் ரூ. 7 கோடி அளவிற்கு சுருட்டப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதில் தொடர்புடைய பாதுகாப்பு துறையின் முதன்மை கணக்கு தணிக்கை துறை அலுவலகத்தில் இருந்து 5 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.  இதுகுறித்து மெயில் டுடே இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மும்பையை தலைமையாக கொண்ட மேற்கு கடற்படையில் போலி பில்கள் தயாரித்து கமாண்டர் ரேங்க்கில் இருக்கும் அதிகாரிகள் ரூ.7 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக மேற்கு கமாண்டன்ட் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பல கடற்படை கிளைகளில் உள்ள கம்ப்யூட்டரில் பிரத்யேக பாஸ்வேர்ட்களை பயன்படுத்தி அதில் இருக்கும் கணக்கு வழக்குகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒரு பில்லை அழித்து விட்டு வேறொரு போலியான பில்லை கூடுதல் தொகையுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தில்லுமுல்லுகள் நடைபெற்றிருக்கிறது. இந்த கணக்குகள் முழுவதும் கணக்கு தணிக்கையாளரின் ஆய்வுக்கு பாதுகாப்பு கணக்கு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆய்வு செய்த போது, 2016ம் ஆண்டு முதல் இந்த மோசடிகள் நடைபெற்று இருப்பதற்குரிய ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன. இது போன்ற மோசடிகள் தற்போது வரை நடைபெற்று வருவதும் தெரிய வந்திருக்கிறது.
பதிவு செய்யப்பட்டு ஆவணங்களில் இருக்கும் பல பில்கள் கம்ப்யூட்டரில்  நீக்கப்பட்டிருக்கிறது. 2016ல் மட்டும் 6 பில்களை கம்ப்யூட்டரில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அதன் மதிப்பு ரூ 6கோடியே 70 லட்சம் ஆகும். இதில் மோசடி செய்திருப்பதற்கு எல்லா முகாந்தரமும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பில்கள் அனைத்தும் பாதுகாப்பு துறையின் பொது கணக்கு தணிக்கை துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ஊழல் துரிதமாக விசாரிக்கப்பட்டால்  இந்த ஊழலின் மதிப்பு பல்லாயிரங்கோடியை தொடும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக மெயில் டுடே இதழ் தெரிவித்திருக்கிறது.

மேலும் கமாண்டர் ரேங்க் அதிகாரி தலைமையிலான விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த போலி பில்களை உருவாக்கி கம்யூட்டரில் சேர்த்திருப்பதும் கமாண்டர் ரேங்க்கில் உள்ள அதிகாரிகள்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் எப்படி நியாயமான விசாரணை நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் இந்த ஊழலில் பாதுகாப்பு துறையின் முதன்மை பொதுகணக்கு தணிக்கை துறையின் உயர் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து செயல்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு துறையின் முதன்மை கணக்கு தணிக்கை அலுவலகத்தில் உள்ள ஐந்து அதிகாரிகள் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்த தகவல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிப்பதாக மெயில் டுடே தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ ) யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று மெயில் டுடே இதழ் தெரிவித்திருக்கிறது. ஆனால் இதற்கு இதுவரை மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை.

தேசபக்தர்கள் என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் பாஜக எப்போதும் தேசத்தை காக்கும் ராணுவத்துறயை கூட ஊழல் செய்வதில் இருந்து வ விட்டுவைப்பதில்லை.  சவப்பெட்டி ஊழல் தொடங்கி, ஆயுத கொள்முதல், ராணுவத்தினருக்கு வழங்கும் உணவில் ஊழல், போலி பில்கள் மூலம் என பாஜகவின் ஊழல்களும் ராணுவ மிடுக்குடன் அணிவகுத்து நிற்கிறது…

Leave A Reply

%d bloggers like this: