திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் பொறுப்பில் உள்ள 95-ஊராட்சிகளில் கடந்த 3 மாதத்தில் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் என்பது ஆதரவற்ற முதியோருக்கு பேருதவியாக உள்ளது. இப்படி வறுமையில் உள்ள மக்களை கணக்கில் கொள்ளாமல் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக  அதிகாரிகளை கேட்டபோது ஆதார் அட்டை இல்லை என்பதால் உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினர்.

இந்நிலையில் மாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த  குப்பம்மாள் (67),  குள்ளம்மாள் (70) உட்பட ஐந்து பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியபாளையம் பகுதிச் செயலாளர் டி.சண்முகசுந்தரம், கிளைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோரைச்  சந்தித்து இது தொடர்பான  தகவல்களை தெரிவித்தனர். குப்பம்மாள், குள்ளம்மாள்  ஆகிய இருவரும் 10 முறை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்தபின்னரும், கைவிரல்களில் உள்ள ரேகைகள் தேய்ந்து போனதால் கணினியில் பதிவு செய்ய முடியவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இப்படி ஆதார் அட்டை பெற முடியாமல் உள்ள விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,  படுத்த படுக்கையாக உள்ள முதியோர்  அனைவரும் உதவித்  தொகை  வழங்கக்கோரி ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து தனி வட்டாட்சியர் லதா ஒரு வாரத்தில் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: