பொள்ளாச்சி, நவ.13-
பொள்ளாச்சி அருகே 600 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற பயணிகள் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த செம்மனாம்பதி அருகில் உள்ள கிழவன்புதூர் பிரிவில் ஞாயிறன்று இரவு பொள்ளாச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வருவாய்துறை அலுவலர் சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால், அதனை ஓட்டிவந்த ஒட்டுநர் தப்பியோடிய நிலையில், ஆட்டோவை சோதனையிட்டனர். இதில் சுமார் 600 கிலோ எடையுள்ள ரேசன் அரிசிகள் மூட்டைகளில் கட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசி மற்றும் அதனை கடத்த முயன்ற ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரேசன் அரிசியினை கடத்த முயன்ற நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு பயணிகள் ஆட்டோ என ஐந்து வாகனங்களின் மூலம் சுமார் 2 டன் அளவிலான ரேசன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரிசி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குடிமைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: