கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய ரூ. 1900 கோடியை வழங்கக் கோரியும், முதலாளிகளுக்கு ஆதரவான வருவாய் பங்கீட்டு முறையை எதிர்த்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நவ.13 திங்களன்று கள்ளக்குறிச்சியில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

கோமுகி ஆலைத் தலைவர் ஆர்.குருநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, “தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வறுமையில் வாடும் விவசாயி வாங்கிய கடனுக்கு ஏல நோட்டிஸ் அனுப்பப்படுகிறது. அடியாட்களை வைத்து மிரட்டி தாக்கி அவமானப்படுத்துகிறார்கள். இதனால் விவசாயி தற்கொலை செய்துகொண்டு மடியும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை மாற்றவும், என்றார்.

ஊர்வலத்தை துவக்கி வைத்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் பேசியதாவது:- கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், பக்காஸ், பிரஸ்மட் ஆகியவற்றை விற்பதன் மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு வரும் வருவாயில் 70 விழுக்காட்டை கரும்புக்கான விலையாக தருவது, மீதி 30 விழுக்காட்டை ஆலை நிர்வாகங்கள் எடுத்துக் கொள்வது என்பதுதான் வருவாய் பங்கீட்டு முறையாகும். இதன்படி கரும்புக்கு விலை தீர்மானித்தால் தமிழ்நாட்டில் 2017-18 பருவ கரும்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள விலை (எப்ஆர்பி) ரூ. 2550 மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு விலையாக கிடைக்கும்.
கடந்த 2016-17 ஆம் ஆண்டு பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்த விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலை (எஸ்ஏபி) சேர்த்து அறிவித்த விலை ரூ.2750 ஆகும். தற்போது இந்த பருவத்திற்கு மத்திய அரசு பரிந்துரை விலையாக ரூ.250 அறிவித்துள்ள நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு ரூ.3000 விலை அறிவித்து வழங்க வேண்டிய நிலையில் வருவாய் பங்கீட்டு முறைப்படி ரூ.2550 என்பதை எப்படி விவசாயிகள் ஏற்பார்கள்?
இந்த பருவத்தில் மட்டும் தமிழகத்தில் 125 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் நிலையில் 1 டன்னுக்கு ரூ.450 என விவசாயிக ளுக்கு மொத்தம் ரூ.500 கோடி நஷ்டம் ஏற்படும். முதலாளிகளுக்கு ஆதரவான இந்த வருவாய் பங்கீட்டு முறையை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எதிர்த்தும், இந்த அரவைப் பருவத்திற் கான பரிந்துரை விலையை அறிவிக்கக் கோரியும், பாக்கி பணம் 1900 கோடி ரூபாயை உடனே வழங்கக் கோரியும் போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.ஏழுமலை, மாநில பொருளாளர் எம்.சின்னப்பா, மாநில செயலாளர் எஸ்.ஜோதிராமன், ஏ.கே.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர்கள் ஏ.ஜனார்த்தனன், குண்டு ரெட்டியார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மல்லிகா ஆர்ப்பாட்ட மேடைக்கே வந்து கோரிக்கை மனுவை தலைவர்களி டமிருந்து பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: