பல்லடம்,நவ.13-
பல்லடம் அருகே சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் புதூரில் உள்ள பெரியசாலை தோட்டத்தில் இளங்கோ (40) என்பவர் சாயபட்டறை மற்றும் பின்னலாடை சாயமேற்றிய துணிகளை உலர்த்தி கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இவர் காலை முதல் மாலை வரையும் சாய தொழிலகத்தில் இருப்பது வழக்கம். அவரது தந்தை முத்துசாமி (65) இரவில் அங்கேயே தங்கி தொழிலையும் மற்றும் காவல் பணியிலும் ஈடுபட்டு வந்தார். ஞாயிறன்று வழக்கம்போல் முத்துசாமி பணிகளை கவனிக்க வந்தவர் திங்கள்கிழமை காலை 8 மணியாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து இளங்கோ தொழிலகத்திற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வாயில் துணி அடைக்கப்பட்டு கை,கால் கட்டப்பட்ட நிலையில் முத்துசாமி பிணமாக கிடந்துள்ளார். மேலும் நிறுவனத்தில் உலர்த்த போடப்பட்டு இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம்கிலோ சாயமேற்றப்பட்ட பின்னாலாடை துணிகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இளங்கோ பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மோப்பநாயைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் முத்துசாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: