===சி.ஸ்ரீராமுலு===
இந்திய கால்பந்து காதலர்களுக்கு அடுத்த ஐந்து மாத காலத்திற்கு ஒரே கொண்டாட்டம்தான். காரணம் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் வரும் நவம்பர் 17 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கி மார்ச் 17 அன்று கொல்கத்தாவில் முடிவடைகிறது.இந்த சீசனில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் 77 சர்வதேச வீரர்கள், 166 உள்ளூர் வீரர்களை சுமார் ரூ.133 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. உள்ளூர் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ள இந்த தொடர் குறித்த ஒரு கண்ணோட்டம்:-
 வெற்றிப் பயணம் தொடரும்?
ஐஎஸ்எல் 2வது சீசனில் கோவா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமை நமது சென்னை அணிக்கு உண்டு. கடந்த மூன்று தொடர்களிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் சென்னையும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. அணிக்கு வெளிநாட்டு வீரர் கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் 26 வயதாகும் உள்ளூர் வீரர் ஜெஜி தான் ‘சூப்பர் ஸ்டார்’. முதல் சீசனில் இவரது சிறப்பான ஆட்டம் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது. 14 கோல்கள் அடித்து ஜெஜி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 3வது தொடரில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் இம்முறையும் பிரேசிலின் நட்சத்திரம் ரபேல் அகஸ்டோ தொடர்ந்து அணியில் இருப்பது மிகப்பெரிய பலமாகும். அணியின் கேப்டன் ஸ்பெயினின் இனிகோ கால்டிரான், துணைக் கேப்டன் போர்ச்சுக்கலின் ஹென்றி, பிரேசிலின் இளம் வீரர் மைல்சன், ஜெஜி என பல பிரபலங்கள் இருப்பதால் கோப்பையை வெல்லும் அணிகளில் சென்னையும் ஒன்றாகும்.

சிகரத்தை எட்டுமா?
முதல் சீசனில் அரையிறுதி வாய்ப்பை இழந்த தில்லி டைனமோஸ் அதன் பின் சிறப்பாக ஆடி வருகிறது. அடுத்த 2 சீசன்களிலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த சீசனிலாவது சிங்கங்கள் தங்கள் குகைக்கு வெளியே கர்ஜிக்க வேண்டும்.இந்த அணியில் கவனிக்கப்பட வேண்டியவர் போர்ச்சுக்கலின் மிகுவல் ஏஞ்சல். கடந்த சீசனைக் காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளது. கடந்த காலங்களில் மலூடா, ராபின் சிங், ரிச்சர்ட் , மார்சிலனோ ஆகியோரையே அந்த அணி சார்ந்து இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, ஒருங்கிணைந்த அணியாக உருவெடுத்துள்ளது. இப்போது சிகரத்தை எட்டுவதுதான் அவர்களின் இலக்காகும்.

தடைகளை உடைக்குமா?
கடந்த சீசனில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது கோவா அணி. அந்த அணி வீரரும் சிறந்த பயிற்சியாளருமான பிரேசிலின் ஜிகோவை இம்முறை கழற்றிவிட்ட அணி நிர்வாகம், 40 வயதே நிரம்பிய ஸ்பெயினின் செர்கியோவை நியமித்துள்ளது. இவர் ஐஎஸ்எல் தொடரின் இளம் பயிற்சியாளர். கடந்த சீசனில் மிகமோசமான முடிவு கிடைத்தாலும் 2015ல் கோவா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் ஜிகோ. அவருக்கு மாற்றாக வந்திருக்கும் செர்கியோ தலைமையில் இந்த அணி சாதித்துக்காட்டும் என்று நம்பலாம்.

இந்த அணிக்கு வெளிநாட்டு கோல்கீப்பர் இல்லாதது பெரிய பலவீனம். லட்சுமிகாந்த் கட்டிமானிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பார்சிலோனாவின் மானுவேல், அகமது ஜகோவா, ஃபெர்ரன் , புருனோ என திறமை வாய்ந்த வீரர்கள் நிறைந்த கோவா அணி தடைகளை தாண்டி சாதிக்கும் என எதிர்பார்ப்போம்.

தடுமாற்றம்…!
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத இரு அணிகளில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் அணியும் ஒன்று. கடந்த 3 தொடர்களிலும் சிறப்பாக ஆடிய போதும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது. கால்பந்து காதல் மிக்க நார்த் ஈஸ்ட் ரசிகர்கள் தங்கள் அணியிடம் மிகவும் எதிர்பார்ப் புடன் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு சிறப்பாக ஆடவேண்டும் என அந்த அணி ரசிகர்கள் விரும்புகிறார்கள்.அந்த அணியின் பயிற்சியாளர் காடா மாற்றப்பட்டு போர்ச்சுக்கலின் ஜோவோ கார்லோஸ் பைரஸ்டி டூஸ் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார். தடுமாறும் இளம் வீரர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து வருவதே அவரது முதல் கடமையாகும்.

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்!                                                                                                                                       இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு அடுத்து பிரபலமான விளையாட்டு கால்பந்தாகும். மேற்குவங்கம், கேரளா, மணிப்பூர், கோவா, மிசோ ரம், சிக்கிம், கோவாவில் பாரம்பரியமாக விளையாடப்படு வது இது.

கொல்கத்தா நகரம், கால்பந்து ரசிகர்களால் நிரம்பியுள்ள நகரமாகும். இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்புகள் கொல்கத்தா நகரில்தான் உள்ளன. அதை நிரூபிக்கும் வகையில் அந்த அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது. மூன்றாவது முறையாக ‘ஹாட்ரிக்’ அடிக்க முழுமையாக தயாராகி வருகிறது.இரண்டு முறை இறுதிப்போட்டிக்குச் சென்றும் கொல்கத்தாவிடம் கோப்பையை பறிகொடுத்த கேரள அணி இம்முறை நட்சத்திர வீரர்களுடன் கோப்பையை வென்றே தீரவேண்டும் என்று களம் இறங்குகிறது.

மும்பை, புனே அணிகளின் பலத்தையும் அவ்வளவாக குறைத்து மதிப்பிடமுடியாது. அறிமுகமாக களம் இறங்கும் பெங்களூரு, ஜம்ஷெட்பூர் அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளதால் இந்த தொடர் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave A Reply

%d bloggers like this: