புதுதில்லி:

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்னுமிடத்தில் பசுப் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதற்கும், ஒருவர் காணாமல் போனதற்கும் இவ்வாறு கொலைபுரிந்தவர்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசு துணை போவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பசுப்பாதுகாப்புக் குழுவைத் தடை செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்னுமிடத்தில் பசுப்பாதுகாப்புக் குழு என்னும் பெயரில் கொலைகாரக் கும்பல் ஒன்று, பசுக்கள் வாங்க வந்தவர்களைத் தாக்கியுள்ளது. இதில் உம்மர் கான் என்னும்  விவசாயி சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ஜாவெட் கான் என்பவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தாகிர் கான் என்பவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்னன. இந்தக் கும்பல் இவர்கள் தாக்கியது மட்டுமல்லாமல், துப்பாக்கியால் இவர்களை நோக்கிச் சுட்டுமள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ராஜஸ்தான் மாநில அரசு, இவ்வாறு தாக்கியவர்களைச் சுதந்திரமாகப் போகவிட்டுவிட்டு, இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீதே வழக்கு தொடுத்திருப்பதாகும்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் இத்தகு பசுப்பாதுகாப்புக் குழுக்கள் தாக்குதல் தொடுப்பதைத் தடுத்துநிறுத்திட வேண்டும் என்றும், அவ்வாறு தாக்குபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடுமையான முறையில் அறிவுரைகளை அளித்துள்ளது. இதற்காக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமித்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் அளித்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அந்த அறிவுரையில் குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளுக்கு மத்திய அரசும், ராஜஸ்தான் மாநில அரசும் கட்டுப்பட வேண்டும் என்றும், இத்தகு கொலைபாதக செயல்களில் ஈடுபட்ட கயவர்களைக் கைது செய்திட வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நீதியை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. மேலும், இவ்வாறு நாடு முழுதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பசுப் பாதுகாப்புக்குழுக்களையும், அறநெறி காவல்குழுக்களையும் (moral police) தடை செய்திட வேண்டும் என்றும மத்திய அரசை  அரசியல் தலைமைக்குழு கோருகிறது”. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: