திருப்பூர், நவ. 13-
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தென்னிந்திய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற உள்ள மாணவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் பள்ளிகளுக்கிடையான அறிவியல் கண்காட்சி ஆண்டு தோறும் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு தென்னிந்திய மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதே போன்று இந்த ஆண்டு (2017) நடைபெற்ற போட்டியில் ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் கே.திருவருட்செல்வன் என்ற மாணவன் வாகன புகையால் ஏற்படும் மாசுவை குறைக்கும் வகையில் சைலண்டர் என்ற கருவியினை வடிவமைத்துள்ளார். இந்த கருவியை வாகனங்களில் சைலன்சர் இருக்கக்கூடிய இடத்தில் பொருத்துவதன் மூலமாக காற்று மாசுவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளோடு சார்க்கோல் (கரி) மற்றும் ஸ்பான்ச் (பஞ்சு) போன்ற பொருட்களை பயன்படுத்தி வடிவமைத்துள்ளார். வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்று கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2018 ம் ஆண்டு முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டிருக்கும் மாணவரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, வாழ்த்துக்களையும். பாராட்டு தல்களையும் தெரிவித்ததோடு தென்னிந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி உடனிருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: