திருப்பூர், நவ.13 –
திருப்பூர் நகரில் உரிமத்தைப் புதுப்பிக்காமல் திரைப்படத்தை ஒளிபரப்பிய திரையரங்கிற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். திருப்பூர் அவிநாசி ரோடு குமார்நகர் முருங்கபாளையத்தில் விஜயகுமார் என்பவரின் மனைவி ஜானகி என்பவருக்கு சொந்தமான சரண் தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமம் காலாவதியானதால், அதை புதுப்பிக்குமாறு வருவாய்துறை சார்பில் உரிமையாளருக்கு முறையான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிமம் புதுப்பிக்கப்படும் வரை தியேட்டரில் திரைப்படம் ஒளிபரப்பக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். எனவே படம் ஒளிபரப்பப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் இந்த தியேட்டரில் புதிய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, துணை ஆட்சியர் ஸ்வரன்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு சீல்வைக்குமாறு உத்தரவிட்டனர். இதன்பேரில் திருப்பூர்வடக்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் ஞாயிறன்று காலை அந்த தியேட்டருக்குச் சீல் வைத்தனர். தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: