கடற்கரைக்கு அருகில் உள்ள ஜெயலலிதா சமாதியை இடமாற்றம் செய்யக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் கடலோர பகுதி ஒழுங்குமுறை ஆணையம் கடலோரப் பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

‘‘சென்னை உயர்நீதிமன்றமும் கடலோரப் பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள கடந்த 2016 ஆம் ஆண்டு தடைவிதித்தது.  இப்படி இருக்கும் போது ஜெயலலிதாவிற்கு  15 கோடி ரூபாய் செலவில் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்கள் சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஜெயலலிதா நினைவிடம் உட்பட மூன்று நினைவிடங்களையும் கிண்டியில் மற்ற நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும்’’ என்றும் அவர் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

Leave A Reply