கொச்சி;
ஜிஎஸ்டி வரி குறைப்பால் பிரச்சனைகள் குறைந்து விட்டதாக கருத வேண்டாம். கார்ப்பரேட்டுகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டாம் என்பதே மத்திய அரசின் திட்டம். எனவே இப்போது குறைக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் பொதுமக்கள் மீதான சுமையில் எந்தவிதமாக மாற்றமும் ஏற்படாது என்று கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,ஜிஎஸ்டி குறைப்பு ஊடகங்களில் தலைப்புச்செய்தி. இதோடு ஜிஎஸ்டியால் வந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் புதிய பிரச்சனைகள் தொடங்கியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. 28 சதவீதம் வரித் தொகுப்பில் இப்போது 50 பொருட்களே உள்ளன. மற்ற அனைத்து பொருட்களும் 18 சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

18 சதவீதத்தில் இருந்து பலபொருட்கள் 12க்கும், 5க்கும் மாற்றப்பட்டுள்ளன.ஹோட்டல் வரி 5 சதிவீதமாக மாற்றப்பட்டது மற்றொரு முக்கிய முடிவு.அனைத்தையும் கணக்கிட்டால் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். இப்போதும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட குறைவால் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் இழப்பீட்டு செஸ் பற்றாக்குறையாகவே உள்ளது. இப்போது மாநில அரசு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய்க்கான வழி தேட வேண்டும். இத்தனை இழப்பு என்றாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு இதனால் ஏதேனும் நன்மை ஏற்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. கேரளத்தின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளலாம். வாட் வரி விதிப்பால் கேரளத்தின் வரி வருவாயில் 80 சதவீதம் கிடைத்து வந்தது பதினான்கரை சதவீதம் என்கிற வரி விதிப்பின் மூலமாக. இப்போது அந்த வருவாய் கிடைப்பது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து தான். அதிலும் ஒரு பகுதி மத்திய அரசுக்கு உரியதாகும். ஜிஎஸ்டி முறையில் 28 சதவீதம் வரிவிதிக்கப்படும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் மூன்றில் ஒருபகுதியாக குறையும்.

காரணம் அந்த வரி விகிதத்தில் உள்ள பொருட்களைின் எண்ணிக்கை 50 மட்டுமே. கேரளத்தில் பொருட்கள் ஒவ்வொன்றின் விலையும் குறையவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வரி குறைப்பு முழுவதும் நிறுவனங்களதும், வியாபாரிகளதும் கொள்ளை லாபமாக மாறியது. கேரள அரசு 636 பொருட்களைக் குறித்து ஆய்வு செய்தது. அப்போது வெறும் 163 பொருட்கள் மட்டுமே வரி குறைப்பில் உள்ளது தெரியவந்தது.ஆனால் இப்போதுள்ள புதிய மாற்றத்திற்கு பிறகு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் 20 சதவீதம் கூட வராது என்பதே எனது மதிப்பீடு. வரி விதிப்பு குறைந்திருப்பதாக தெரியும். ஆனால் மக்களைப் பொறுத்தவரை வரிச்சுமையில் குறைவு ஏற்படவில்லை. அதிகரித்துள்ளது. அதிக கொள்ளை லாபத்தை நிறுவனங்களும், வியாபாரிகளும் பெற்று வருகிறார்கள். இவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவில்லை. கார்ப்பரேட்டுகளின் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டாம் என்பதே மத்திய அரசின் நிலைபாடு. எனவே இப்போது உள்ள வரி குறைப்பு மக்கள் மீதான சுமையை குறைக்காது என தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: