வடகிழக்குப் பருவ மழை கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்பை விட 93 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. ஆனால் இந்த மழைநீரை  நம்மால் முறையாக சேமித்து வைக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். சென்னையில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்தாலும் அந்த மழைநீர் அனைத்தும் வீணாக கடலுக்குத்தான் சென்றது. அதை சேமிக்க வழிமுறை ஏதும் கிடையாது.

சென்னை புறநகரில் கூடுவாஞ்சேரி ஏரி, மணிமங்கலம் ஏரி, ஆதனூர் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, நாராயணபுரம் ஏரி, சிங்கப்பெருமாள் கோவில் ஏரி உள்பட நூற்றுக்கணக்கான சின்ன ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்து விட்டது. இந்த மழை நீரை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு முறையாக திருப்பி விட வடிகால் வசதியும் சரி வர இல்லை.

வடிகால்கள் தூர்வாரப் படாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் வீதிகளிலும், வீடுகளுக்கும் புகுந்து அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி கடலுக்குள் சென்றது.இதே போல் கூவம், கொசஸ்தலை ஆற்றிலும், பக்கிங்காம் கால்வாயிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி கடலுக்கு சென்று விட்டது.

இதுகுறித்து நீர்வள பாதுகாப்பு அபிவிருத்தி திட்ட பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
சென்னையில் கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் கடும் அவதிப்படுவதை  கண்கூடாக பார்க்கிறோம். ஆனால் மழை காலத்தில் அதிக மழை கிடைத்தும் நம்மால் அதை முழுமையாக சேமிக்க முடியாத நிலையில்தான் உள்ளோம்.

சென்னைக்கு 1 ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் இருந்தாலே குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். ஆனால் 55 டி.எம்.சி. அளவுக்கு மழை பெய்தும் அந்த தண்ணீரை சேமிக்க முடியாததால் வீணாக கடலில் கலந்து விட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு அதிக அளவு மழை நீர்வராததால் இன்னும் முழுமையாக ஏரிகள் நிரம்பவில்லை. 3-ல் 1 பங்கு தண்ணீர்தான் உள்ளது.

ஒரு பக்கம் வெள்ளம், மறுபக்கம் வறட்சி என்ற நிலையிலேயே சென்னையின் கட்டமைப்பு உருமாறி விட்டது. வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி மழை நீர் ஏரிகளுக்கு செல்லும் வகையில் செயல்படுவது மிகவும் அவசியமாகி விட்டது என்பதை வடகிழக்கு பருவமழை நமக்கு உணர்த்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: