தாராபுரம், நவ. 13 –
கேரளாவிற்கு காரில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சாவை தாராபுரம் காவல்துறையினர் கைப்பற்றி, அதனை கொண்டு சென்ற இருவரை கைது செய்தனர்.

கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்ததகவலின் பேரில் காவல் ஆய்வாளர் வரதராஜ், காவலர்கள் ஞானவெங்கடேஷ், பூபதி ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பஞ்சப்பட்டி அருகே கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் காரில் இரண்டு 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் டேப் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து காரில் இருந்த வாலிபர்கள் இருவரை பிடித்து விசாரிக்கையில், அவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், எரநாடு தாலுக்கா, மஞ்சேரி கிராமம், பையநாடை சேர்ந்த யூசுப் மகன் சியாஸ் (22) மற்றும் பாலக்காடு மாவட்டம், மண்ணாங்கோடு, சிங்காரா ஹவுஸ் பகுதியை சேர்ந்த உமர் மகன் ஹம்சா (25) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், இவர்கள் போடி பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply