பொள்ளாச்சி, நவ.13-
பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றுப்படுகையின் அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அம்பராம்பாளையம் ஊராட்சியில் ஆற்றுப்படுகைக்கு செல்லும் வழியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய கழிவுகளை விஷமிகள் அனுதினமும் கொட்டி வருகின்றனர். அதிலும், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்ற அம்பராம்பாளையம் ஆற்றில் குப்பை கழிவுகளை இரவு நேரங்களில் சிலர் வீசிவிட்டும் செல்கின்றனர். இதனால் குடிநீர் மாசடைந்து வருகிறது.

மேலும், இந்த குப்பை கழிவுகளால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதோடு, மேய்ச்சலில் இருக்கும் கால்நடைகளான ஆடு, மாடுகள் அதனை உண்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றன. இதுதொடர்பாக அம்பராம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்ககையும் எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: