கோவை, நவ.13-
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் உள்ள தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், எட்டிமடை, மதுக்கரை, மவுத்தம்பதி ஆகிய இடங்களில் சமீபகாலமாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனித – விலங்கு மோதல் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இதுதொடர்பாக, யானைகள் ஊருக்குள் நுழைந்தவுடன் சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்தாலும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் முறையிட்டபோது, அக்கூட்டங்களுக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வராமல் புறக்கணித்து வருகின்றனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தலைமையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: