=-==ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன்==-=                                                                                   கட்டுரையாளர்:பிஎஸ்என்எல் ஊழியர் சங்க வேலூர் மாவட்ட உதவி செயலாளர்.                                              “குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்”
என்ற குறள் மொழிக்கேற்ப மழலைச் செல்வங்களை – குழந்தைகளை சீராட்டி, பாராட்டி போற்றும் விதமாக இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில், அதாவது சுமார் 125 கோடி பேரில் 35 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைளும், சிறுவர்,சிறுமியரும் தான்!
உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழாக வாழ்கிறவர்கள் 76 கோடி பேர் என்றால் அதில் ஏறக்குறைய சரிபாதி மக்கள் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாடி வதங்குகின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் அதாவது 36 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். ரங்கராஜன் கமிட்டி அறிக்கையின்படி ஒரு நாளைக்கு கிராமப்புறங்களில் 32 ரூபாயும், நகரப்புறங்களில் 47ரூபாயும் கூட சம்பாதிக்க முடியாத படு ஏழைகள் அவர்கள்.

இப்படி படு ஏழையாக வாழ்க்கையை நகர்த்தும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் – தொட்டில் தொடங்கி சுடுகாடுவரை வறுமைக் கொடுமைக்கு ஆளாகி, தங்கள் உரிமை மற்றும், சமூகப் பாதுகாப்பைத் தொலைத்தே வாழ்கின்றனர். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் மற்றும் கல்வி, சுகாதாரம் எல்லாமே ஒரு பெரிய கேள்விக் குறியாகவே மாறுகிறது!இந்தியாவில் கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் வாடுகின்றனர். மூன்றில் ஒரு குழந்தைக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை! நான்கில் மூன்று குழந்தை இரத்த சோகை நோயால் வாடுகிறது.

“கல்லாரைக் காணுங்கால் – கல்வி நல்கா
கசடர்க்கு தூக்குமரம் அங்கே உண்டாம்!”
என்றார் புரட்சிக் கவி பாரதிதாசன்.

இந்திய மக்கள் தொகையில் எழுதப் படிக்கத் தெரியாத கல்லாரின் எண்ணிக்கை 25 சதவிகிதம்! யாரைத் தூக்கில் எங்கே போடுவது? ஆரம்பக் கல்வி பெறாத குழந்தைகள் அதிகம் இருக்கும் மோசமான 10 நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. உலகின் 4வது பெரிய பொருளாதார வல்லரசாக மோடி பறைசாற்றிக் கொள்ளும், இந்திய தேசத்தில் நிலவும் கொடிய வறுமையும், குழந்தை தொழிலாளர் முறையுமே இதற்கு முக்கிய காரணங்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86வது திருத்தச் சட்டமும் – பிரிவு 21 ஏ-வும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வியை “அடிப்படை உரிமை” என பிரகடனப்படுத்துகிறது.அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது பிரிவு – குழந்தைகளுக்கு ஆறு வயது வரை உரிய அக்கறையும்- கல்வியும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் எனத் தெள்ளத் தெளிவாக வரையறுக்கிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன்படி 6 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 8வது வகுப்பு வரை இலவசக் கல்வி கண்டிப்பாக வழங்கப்படவேண்டும் என்று ஒரு புறம் சொல்லப்பட்டாலும் கேரளாவைத் தவிர இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் “நூறு சதவீத ஆரம்பக் கல்வி” என்பது இதுவரை சாதிக்கப்படவில்லை.

தடுமாறும் ஆரம்பக்கல்வி
இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களில் சராசரியாக 96 சதவீதக் குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்க பள்ளிகளில் சேருகிறார்கள் என்பது உண்மையின் ஒரு பக்கம்தான்! அதன் மறுபக்கமோ- அப்படி சேரும் குழந்தைகளில் 39 சதவீதம் பேர் 5ஆம் வகுப்பை முடிப்பதற்குள்ளும், 43 சதவீதம் பேர் 8வது வகுப்பை முடிப்பதற்குள்ளும் பள்ளியை விட்டுப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள் என்ற சோகம்தான்!

அப்படியே தட்டுத்தடுமாறி ஆரம்பக் கல்வியைப் பயிலும் குழந்தைகளின் கல்வித் தரமும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. மூன்றாம் வகுப்பில் பயிலும் 78 சதவீத மாணவர்களும் – ஐந்தாம் வகுப்பில் பயிலும் 50 சதவீத மாணவர்களும் இரண்டாவது வகுப்பு பாடத்தைக் கூட திறம்படப் படிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

எத்தனை பெரிய அவமானம்;                                                                                                                                                           அதே போல குழந்தைகளின் ஆரோக்கியமும் -சுகாதாரமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை! சிசு மரணமும், குழந்தை இறப்புகளும் இந்திய அளவில் மிக அதிகமாகவே இருக்கிறது. உலகில் அதிகக் குழந்தைகள் மரணம் அடையும் நாடு என்பதுதான் இந்தியாவின் ‘பெருமை’. 2000 முதல் 2015 வரையிலான 15 வருடங்களில் மரணமடைந்திருக்கும் 5 வயதுக்கு கீழேயான குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 2 கோடி 90 லட்சம்! ஒட்டு மொத்த உலக எண்ணிக்கையில் இது 20 சதவீதம்.தெற்காசியாவில் – பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த 10 லட்சம் சிசுக்களில் 7 லட்சம் சிசுக்கள் இந்தியாவைச் சார்ந்தவை என்கிறது யூனிசெப் அறிக்கை. அதன்படி 2015 வரையிலான உலக சிசு மரணங்களில் 26 சதவீதம் இந்தியாவைச் சார்ந்தவை. இது எவ்வளவு பெரிய அவமானம்!
இந்திய நாட்டைப் பொறுத்த மட்டில் 1000 குழந்தைகளில் சுமார் 63 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன! அல்லது பிறந்த ஓரிரு வாரத்தில் இறந்து விடுகின்றன! இதற்கு காரணம் இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணம், தாயின் சத்துக் குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியும் அரசுகளின் அக்கறையும் இல்லாததுதான்!

அதே போல – தடுக்கக்கூடிய நோயால் மட்டும் இந்தியாவில் ஆண்டுதோறும் 20 லட்சம் குழந்தைகள் இறந்து விடுகின்றன. தட்டம்மை (measles) நோய்க்குரிய தடுப்பூசி முறையாகப் போடப்படாததால் பெருவாரியான குழந்தை மரணங்கள் திகழ்கின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீரும் போதிய சத்தான உணவும் சரிவரக்கிடைக்காத காரணத்தால் இந்திய அளவில் நான்கில் ஒரு குழந்தை வயிற்றுக்போக்கால் இறக்கிறது.

தவறான பாலுறவுக்கு பெண் குழந்தைகள் – சிறுமியர்கள் கட்டாயமாக உட்படுத்தப்படுவதால் – மனோரீதியான பாதிப்புகளுக்கும் எச்ஐவி- எய்ட்ஸ் -விடி போன்ற உயிர்க்கொல்லி நோய்த் தொற்றுக்கும் ஆளாகிறார்கள் .

மாற்றுத் திறனாளியாக – உடல் குறைபாடு – மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தை அல்லது வளரும் போது பாதிப்படையும் குழந்தை, இவர்களுக்கு உரிய கல்விக் கூடங்களும், வசதிகளும் போதுமான அளவில் நமது நாட்டில் இல்லை. அதுவும் குறிப்பாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அரசின் போதுமான அக்கறை இன்மையால், கவனிப்பாரற்று இருக்கின்றனர்.

குழந்தை உழைப்புச் சுரண்டல்
அதே போல – குழந்தை தொழிலாளர் என்னுமொரு பெருங்கொடுமை! குடும்ப வறுமையும், அரசு மற்றும் சமூகப் பாதுகாப்பின்மையும் இக் கொடுமைக்கான அடிப்படைக் காரணங்கள்! உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர் வாழும் நாடு நமது இந்தியாதான்! 2 கோடிக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாக ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த எம்.வி. பவுண்டேசன் என்ற அமைப்பின் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.பருத்தி உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் மட்டும் 7 வயது முதல் 14 வயது வரையுள்ள சுமார் 4 லட்சம் குழந்தைகள் அதுவும் பெருவாரியாகப் பெண் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். செங்கல் சூளைகளில் – கல்குவாரிகளில்- விலையுயர்ந்த கற்களை அறுக்கும் தொழிலில்- ஜரிகை,எம்ப்ராய்டரி தொழிலில்- விவசாயத்தில்- நெசவில் -தச்சுத் தொழிலில்- ஓட்டல்களில்- பட்டாசுத் தொழிற்சாலைகளில் – பீடித் தொழிலில் என குழந்தைத் தொழிலாளர் ஈடுபடாத தொழிலே இந்தியாவில் இல்லை என்ற அளவிற்கு பெரும் கொடுமை அரங்கேறுகிறது!

ஏழை – பணக்காரன் என்ற இடைவெளி அதிகமாகிக் கொண்டே போவதும் – அடிப்படை சேவைத் துறைகள் தனியார் மயமாவதும் – புதிய பொருளாதார கொள்கைகளை மோடி அரசு – அங்கிங் கெனாதபடி எல்லா துறைகளிலும் வலிய புகுத்துவதும்- போதிய கல்வி வசதியை அரசாங்கம் செய்து கொடுக்காததும் குழந்தை தொழிலாளர் முறை பெருக்கத்துக்கான முக்கியக் காரணங்களாகும்! அதிலும் குறிப்பாக – ஒரு கோடிக்கும் அதிகமாக கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் இந்திய நாடு முழுவதும் வாடி வதைகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரம் கொத்தடிமைக் குழந்தைத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

அதிலும் இந்த கொத்தடிமைகளும் – குழந்தைத் தொழிலாளர்களும் இந்திய நாட்டைப் பொறத்தவரை – விளிம்பு நிலை மக்களான தலித்துகள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம் மக்களிடையேதான் மிக அதிக அளவில் இருக்கின்றனர் என்பது ஒரு சமூக அவலம் அல்லவா? அதை யார் சரிசெய்வது?

“ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!”
என்று குழந்தைகளை விளையாடச் சொன்னான் பாரதி!
“தலைவாரிபூச்சூடி உன்னை – பாட
சாலைக்கு போய்வா! என்றாளுன் அன்னை!”
என்று படிக்கச் சொன்னான் பாரதிதாசன்.
இப்படி விளையாட வேண்டிய பருவத்தில் – படிக்க வேண்டிய வயதில்- குழந்தைகள் தொழிலாளர்களாக வேலை செய்வதும் – கொத்தடிமைகளாக உழல்வதும் நமது நாட்டின் “தேசிய அவமானம்” அல்லவா?
சட்டம் என்ன சொல்கிறது?இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 24வது பிரிவு- இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் எந்தத் தொழிற்சாலையிலும், சுரங்கங்களிலும் எந்தவொரு அபாயகரமான வேலைகளிலும் (HAZARDOUS PROCESS) ஈடுபடுத்தப்படுவதை அப்பட்டமாகத் தடை செய்கிறது!

சுரங்கச் சட்டம் 1952 – 18வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவதைத் தடை செய்கிறது!

குழந்தை தொழிலாளர் சட்டம் 1986 – 14வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று விதி செய்கிறது!

குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் 2016-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தத் தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது . 14 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளை சுரங்கங்களிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு மற்றும் வெடி மருந்து தொழிற்சாலைகளிலும், அபாயகரமான எந்த வேலைகளிலும் கொஞ்சங்கூட ஈடுபடுத்தக்கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.

சட்டம் ஏட்டில் இருக்கிறது! நாட்டில் நடப்பில் அமலாகாத அவல நிலைதான் இந்திய நாடு முழுவதும் இருக்கிறது? சட்டங்களை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டிய சர்க்கார் கண்டும் காணாமல் பொறுப்பை தட்டிக்கழிக்கும் போக்குதானே எங்குமிருக்கிறது?
அதேபோல சிதைந்த குடும்பங்களாலும், வறுமையுடன் வளர்ந்து வரும் நகரமயமாக்கல் விளைவுகளாலும் இந்திய அளவில் சுமார் 5 லட்சம் தெருவோரக் குழந்தைகள் வீடு வாசல் என்று எதுவுமில்லாமல் வாழ்க்கைப் போராட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விளிம்பு நிலையில் வாடுகின்றனர்.மும்பை, கொல்கத்தா, சென்னை, கான்பூர்,பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் குழந்தைகளும்,தில்லிப் பெரு நகரில் மட்டும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளும் தெருவோரங்களில் வாழ்கிறார்கள் அல்லது திரிகிறார்கள்.
இந்தத் தெருவோரக் குழந்தைகளில் பெரும்பாலோர் “குப்பைப் பொறுக்குதல்” போன்ற சுகாதாரக் கேடான வேலைகளை செய்து “பிழைப்பை ஓட்டும்” எதிர்கால இந்தியாவின் வறுமை வாரிசுகள்” என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

“இந்தியக் குழந்தைகள் தினம்” என்று கொண்டாடப்படும் இந்தத் தருணத்தை நினைத்து மகிழ்வதா? அல்லது “அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீரோடு” எதிர்காலத்தை தொலைத்து விட்டு வாடும் இந்தக் குழந்தைகளைப் பற்றிய மனதைக் குடையும் உண்மைகளை நினைத்து நெகிழ்வதா?
 

Leave A Reply

%d bloggers like this: