கோவை: ஒரே அமரர் ஊர்தி வாகனத்தில் மூன்று பிரேதங்களை ஏற்றி செல்ல நிர்வாகம் நிர்பந்தம் செய்வதை கண்டித்து அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் கோவையில் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சடலங்களை எடுத்து செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையை செஞ்சிலுவை நிர்வாகித்து வரும் நிலையில் இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘

இதுகுறித்து அமரர் ஓட்டுநர்கள் கூறியதாவது:  வாகன ஓட்டுனர்களுக்கு ஓரு நாளை நிர்ணயிக்கபட்ட 525 ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் வெறும் 215 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. மேலும், ஓரே  ஊர்தியில்  மூன்று  சடலங்களை  எடுத்து  செல்ல  நிர்பந்திப்பதாகவும்,  மூன்று  உடல்களும்  வேறு  வேறு  திசைகளில்  எடுத்து செல்லும்  போது ,  இறந்தவர்களின்  உறவினர்களால் தாக்கப்படும் சம்பவகளும் நடைபெறுவதாகவும்,  ஓரே  வாகனத்தில்  மூன்று  சடலங்களை  ஏற்றி   அனுப்பி விட்டு , தனித்தனியாக அனுப்பியதை போல போலி கணக்குகள் வைக்கப்படுவதாகவும், மேலும், பழுதடைந்த அமரர் ஊர்தியில் பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதால் பாதிவழியில் இவ்வாகனங்கள் பழுது ஏற்பட்டு நின்று விடுவதாகவும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் எந்த அமரர் ஊர்தி வாகனத்திலும் குளிர்சாதனப்பெட்டி வேலை செய்வதில்லையென்றும், இதுகுறித்து புகார் தெரிவித்தால் ஓட்டுனர்கள் பழிவாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகத்தின் முறைக்கேடு நடவடிக்கைகளை குறித்து பல முறை மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை எனவும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர். மேலும் திங்களன்று முதற்கட்ட போராட்டம் நடத்தப்பட்டிருப்பதாகவும் அடுத்த கட்டமாக தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  சிஐடியு தமிழ்நாடு அரசு இலவச அமரர்   ஊர்தி ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் சிஐடியு தமிழக அரசு இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன், பொதுச்செயலாளர் அன்புராஜா, பொருளாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: