கோவை, நவ.13-
ஒரே வாகனத்தில் மூன்று பிரேதங்களை வெவ்வேறு திசைகளில் கொண்டு செல்ல நிர்பந்திக்கும் செஞ்சிலுவை சங்க நிர்வாகத்தை கண்டித்து திங்களன்று கோவையில் அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் செயல்படும் அமரர் ஊர்திகளை செஞ்சிலுவை சங்கம் நிர்வகித்து வரும் நிலையில், அங்கு பணிபுரியும் வாகன ஓட்டுனர்களுக்கு நிர்ணயிக்கபட்ட சம்பளமான ரூ.525ஐ வழங்காமல் வெறும் ரூ.215 மட்டுமே வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஓரே ஊர்தியில் மூன்றுசடலங்களை வெவ்வேறு திசைகளில் எடுத்து செல்ல நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் இறந்தவர்களின் உறவினர்களால் ஓட்டுநர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. அதேநேரம், ஓரே வாகனத்தில் மூன்று சடலங்
களை ஏற்றி அனுப்பி விட்டு, அவை தனித்தனியாக அனுப்பியதை போல் போலி கணக்குகள் வைக்கப்படுகிறது.

மேலும், எந்த அமரர் ஊர்தி வாகனத்திலும் குளிர்சாதனப் பெட்டி முறையாக வேலை செய்வதில்லை. இதுகுறித்து புகார் தெரிவிக்கும் ஓட்டுனர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அடுக்கடுக்கான குற்றம்சாட்டி திங்களன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சிஐடியு தமிழ்நாடு அரசு இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர் சங்கத்தின் தலைமையில் அமரர் ஊர்தி ஓட்டுனர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன், பொதுச்செயலாளர் அன்புராஜா, பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.அப்போது, இந்த போராட்டம் முதற்கட்ட போராட்டம் என்றும், அடுத்தகட்டமாக தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரித்தனர். முன்னதாக, இப்போராட்டத்தில் ஏராளமான அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: