புதுதில்லி;
ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏ-க்களை தகுதியிழப்பு செய்வது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் செம்மலையின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது அதிமுக-வில் தனி அணியாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அதிமுக எம்எல்ஏ-க்கள், கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனால் அவர்களின் எம்எல்ஏ பதவி எந்நேரமும் பறிபோகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர்கள் மீது பேரவைத் தலைவர் ப. தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைச் சுட்டிக்காட்டி, 12 பேரையும் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய, பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி, திமுக கொறடா அர. சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால், பேரவைத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது; அத்துடன் ஆந்திர சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், திமுக தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்; அதுவரை சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி – ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ-வான செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கேட்டுக் கொண்டதால், திங்களன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு மனுவை விசாரித்தது.அப்போது திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆந்திர எம்.எல்.ஏ. தொடுத்த வழக்கின் தன்மை வேறு; நாங்கள் தமிழக பேரவைத் தலைவர் பற்றி தொடுத்த வழக்கின் தன்மை வேறு; உயர் நீதிமன்ற விசாரணையை தடுத்துத் தாமதம் செய்யும் வகையில் இந்த மனு செய்யப்பட்டுள்ளது; எனவே சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கக் கூடாது’என்று வாதிட்டார்.

இதையடுத்து, திமுக கொறடா அர. சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்ட நீதிபதிகள், செம்மலை தொடர்ந்த மனு மீதான விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply