திருப்பூர், நவ.13 –
தமிழகத்தில் ஏழைகளின் உணவைப் பறித்து ஜார்கண்ட் மாநிலத்தைப் போல் பட்டினிச் சாவில் தள்ளும் செயலை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கூறினார்.

“உணவு, வேலை எங்கள் உரிமை!” என்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முழக்கத்தின்படி திருப்பூரில் திங்களன்று மாதர் சங்கம் சார்பில் மாநகராட்சி காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தெற்கு மாநகரச் செயலாளர் சி.பானுமதி தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்: உணவு உரிமைச் சட்டம் அனைவருக்கும் உணவை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்பை பாழ்படுத்துவதாக இருக்கிறது.

அரிசி, மண்ணெண்ணை அளவை படிப்படியாகக் குறைக்கின்றனர். சர்க்கரை விலையை உயர்த்துகின்றனர். பருப்பு காணாமல் போய்விட்டது. ரேசனில் ஸ்மார்ட்
கார்டு தருவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஸ்மார்ட் கார்டில் “என்பிஎச்எச்” என முத்திரை குத்திவிட்டால் அவர்களுக்கு எந்தப் பொருளும் கிடையாது. அதேபோல் முதியோர் ஓய்வூதியம், விதவைகள், நலிவடைந்தோர் உதவித் தொகை திட்டங்களையும் பெரும் லஞ்சம் கொடுத்துத்தான் வாங்க முடியும். அதிலும் பெரும்பாலோருக்கு உதவித்தொகை மறுக்கப்படுகிறது. முதியோர் வாழ்வதே கேள்
விக்குறியாக்கப்படுகிறது. நூறுநாள் வேலைத் திட்டமும் சீர்குலைக்கப்படுகிது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரில் பனியன் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செல்லா பணம், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு திருப்பூர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையில் ஏழை உழைப்பாளி மக்களுக்கு ரேசன் உணவுப் பாதுகாப்பையும் பறிக்கின்றனர். உடனடி நிவாரணத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மாற்றத்துக்கும் மாதர் சங்கம் குரல் கொடுக்கிறது. உணவு, வேலை உரிமைகளைப் பறிப்பதற்கு அடிப்படை காரணம், மத்திய மோடி அரசு, மாநில எடப்பாடி பழனிச்சாமி அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படை காரணம். பணக்காரர்களுக்கு வரி விதித்து ஏழைகளுக்கு நலத்திட்டங்களை செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் ஏழைகளின் உணவு, வேலை உரிமையைப் பறிக்கின்றனர். அதே சமயம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கின்றனர். விவசாயிகள் கடன் தள்ளுபடி அளிக்க மறுப்பதுடன், கடனை வசூலிக்க வங்கிகள் ரௌடி பட்டாளங்களை ஏவுகின்றன.

ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே ஆட்சியாளர்களின் கொள்கைகளை மாற்றினால்தான் ஏழை, எளிய மக்களின் உணவு, வேலை உரிமையைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி, மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி,தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.லட்சுமி ஆகியோர் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, மாவட்டப் பொருளாளர் ஏ.ஷகிலா உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உணவு, வேலை உரிமை கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: