புதுதில்லி;
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளிலுள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, 2017 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.அதன்பேரில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

இதனிடையே, மதுக்கடைகளை திறப்பதற்கு வசதியாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, ஊரக சாலைகளாக மாற்றி பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதுபற்றி சிலர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளை மாநில, ஊரக நெடுஞ்சாலைகளாக வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, தான் முன்பு அளித்திருந்த தீர்ப்பையே வலுவிழக்கச் செய்யும் வகையில், குழப்பமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, அவற்றிலிருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

புதிய விளக்கத்தை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும் தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளை திறக்கத் துவங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தவறாக புரிந்து கொண்டு, தமிழக அரசு செயல்படுவதாகவும், மதுக்கடைகளைத் திறந்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய, மாநில சாலைகளை, ஊரகச் சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. ஆனால், தமிழக அரசு, இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்றி, தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 1000 மதுபானக் கடைகள் புதிதாக திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: