திருப்பூர், நவ.13-
ஊத்துக்குளியில் புதியதாக கட்டியுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு சிபிஎம் ஊத்துக்குளி தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா 5 ஆவது மாநாடு ஞாயிறன்று தோழர் கே.எஸ். பழனிசாமி நினைவரங்கத்தில் (ராஜேஸ்வரி திருமண மண்டபம்) நடைபெற்றது. மாநாட்டு கொடியை சாமிநாதன் ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி வாழ்த்துரை வழங்கினார், தாலுகா செயலாளர் கை.குழந்தைசாமி முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

தீர்மானங்கள்:
இம்மாநாட்டில், குன்னத்தூர் பகுதியில் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியும், பாலிடெக்னிக் கல்லூரியும் அமைத்திட வேண்டும். அவிநாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனே துவங்கிட வேண்டும். புதியதாக கட்டி திறக்காமல் உள்ள ஊத்துக்குளி தாலுகா அரசு மருத்துவமனையை விரைந்து திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து புதிய தாலுகா செயலாளராக கே.ஏ.சிவசாமி மற்றும் 12 பேர் தாலுகா குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி நிறைவுரை ஆற்றினார். முன்னதாக, இந்த மாநாட்டையொட்டி குன்னத்தூரில் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: