===ஜெ.பொன்மாறன்===
சின்ன வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே ரூ.100க்கும் கீழே இறங்காமல் மேலே மேலே போய்க் கொண்டிருப்பது தொடர்வது பொதுமக்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்திருக்கிறது.மதுரையில் இன்றைய விலை நிலவரப்படி வெளி கடைகளில் ரூ.160-க்குக் குறையாமல் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வாரங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால் தற்போது குடும்பத் தலைவிகள் சின்ன வெங்காயம் தவிர்த்த சமையலுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி சாரா கூறுகையில், ‘கட்டுபடியாகிற விலையில் இருக்கும்போது இரண்டு கிலோ வெங்காயம் வாங்கிப் பயன்படுத்துவேன். தற்போதைய விலை காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்குவதையே நிறுத்திவிட்டேன். இப்படி விலையிருந்தால் நமக்கு எப்படிக் கட்டுப்படியாகும்’ என்கிறார்.
மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் அதன் நிர்வாக அலுவலர் குணசேகரன் கூறுகையில், ‘சின்ன வெங்காயத்தின் விலையை எங்கள் சந்தையில் நாங்கள் கட்டுக்குள்ளாகவே வைத்திருக்கிறோம்.வெளி மார்க்கெட்டில் உள்ள விலையைவிட கிலோவுக்கு ரூ.40 வரை குறைத்தே விற்பனை செய்கிறோம். (தற்போதைய விலை ரூ.110) உற்பத்தியாளர்களான விவசாயிகளும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யப்படுவதால் இந்த விலை உழவர் சந்தைகளில் சாத்தியம்’ என்கிறார்.

காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தலைவர் அழகுமுருகன் கூறுகையில், ‘சின்ன வெங்காயத்தின் இந்த விலை உயர்வு சற்று எதிர்பாராததுதான், இருந்தாலும் ஒரு கிலோ வாங்க வேண்டிய இடத்தில் கால்கிலோ வாங்கி சமாளிக்கிறோம்’ என்றார்.

வேளாண்துறையைச் சார்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு மிக முக்கியக் காரணம். பொதுவாக, இந்தியாவிலேயே சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகம் கொண்டவர்கள் தமிழர்கள்தான். அதனாலேயே மத்திய அரசு இதில் பாராமுகம் காட்டுகிறது.பொதுவாக தமிழ்நாட்டுக்கு வெளியே சென்றால், பெரும்பாலானோர் பெல்லாரி என்று சொல்லக்கூடிய பெரிய வெங்காயத்தையே முழுவதும் பயன்படுத்துகின்றனர். இது வட மாநிலங்களில் மிக அதிகமாக விளையக்கூடியது. அதனால் மத்திய அரசு பெல்லாரி வெங்காயத்திற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக இதன் விலையில் எப்போதும் தடுமாற்றம் ஏற்படுவதில்லை. சின்ன வெங்காயத்திற்கும் அது போன்ற மானியத்தைப் பெற தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அதனை நம்பி வாழும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்’ என்றார்.

விவசாயிகள் அம்சு மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூறுகையில், ‘ஈரப்பதத்தைப் பொறுத்துதான் வெங்காயத்தின் விளைச்சலில் சீரான உற்பத்தியைப் பார்க்க முடியும். அதிக மழையோ அல்லது அதிக வெயிலோ விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்போது விலை அதிகமென்றாலும் இதனால் உற்பத்தியாளர்களான எங்களுக்கு எந்தவித லாபமுமில்லை. பொதுமக்கள் வாங்குகின்ற அளவு பெரிதும் குறைந்துவிடும்’ என்றனர்.

விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்கி விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மானியம் பெற தமிழக அரசு முயற்சிக்குமா? மத்திய அரசு மனது வைத்து மானியம் வழங்குமா?

Leave A Reply

%d bloggers like this: