சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் ஒருவரால் எழுதப்படும் புத்தகங்கள், நீடித்ததொரு பாதிப்பை எப்படியோ ஏற்படுத்துவதாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். 1923இல் ரத்னகிரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ஹிந்துத்துவாவின் அடிப்படை எனும் தனது விளக்க உரையை வி.டிசாவர்க்கர் எழுதினார்.

தேசியவாதத்தையும், மத அடையாளத்தையும் பயன்படுத்துகின்ற தனது தீவிர வலதுசாரி அரசியல் தத்துவத்தை உருவாக்குவதற்காக, ஹிந்துத்துவா என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். ஹிந்துத்துவா என்பது சாவர்க்கர் உருவாக்கிய கருத்தாக்கமே தவிர, அது இந்தியாவின் ஆன்மீகக் குருக்களால் முன்வைக்கப்பட்டதல்ல. ஹிந்துத்துவா: ஹிந்து என்பவர் யார்?’ என்ற கட்டுரையில், ஹிந்து தத்துவம் என்ற சொல் தெளிவற்றுக் குறிக்கின்ற எதனோடும் ஹிந்துத்துவா என்ற சொல் பொருந்தாது என்று சாவர்க்கரே எழுதியிருக்கிறார்.

ஹிந்து அடையாளத்துடன் உள்ள அனைவரையும் அரசியல்ரீதியாக அணிதிரட்டி போர்க்குணம் கொண்ட தேசியவாதிகளைக் கொண்ட தேசத்தை உருவாக்குவதே சாவர்க்கரின் நோக்கமாக இருந்தது. அந்த நேரத்தில் ஏற்கனவே அரசியல் சார்ந்தவராக இருந்த சாவர்க்கர், 1915ஆம் ஆண்டில் வலதுசாரி அரசியல் கட்சியான அகில பாரதிய ஹிந்து மகாசபாவைத் தோற்றுவித்தார். சாவர்க்கர் எழுதிய ‘ஹிந்துத்துவாவின் அடிப்படை’ புத்தகத்தைப் படித்த டாக்டர் கே.பி.ஹெட்கேவர் அதிலிருந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.இந்திய தேசிய காங்கிரஸுடன் தனக்கிருந்த உறவைத் துண்டித்துவிட்டு, 1925ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) ஹெட்கேவர் நிறுவினார்.

ஆர்எஸ்எஸ் உடன் ஹிந்து மகாசபா கைகோர்த்துக் கொண்ட போது, சங் பரிவார் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த சங்பரிவார் தீவிர வலதுசாரிக் கருத்தியலை வடிவமைப்பதற்கு சாவர்க்கரின் ஹிந்துத்துவாவைத் தத்தெடுத்துக் கொண்டது. ஆர்எஸ்எஸ்சின் இரண்டாவது சர்சங்சாலக்காக, தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கரும் இதில் தனது தாக்கத்தை ஏற்படுத்தினார்.

இவ்வாறு ஹிந்துத்துவா ஒரு அரசியல் சித்தாந்தமாக பிறப்பெடுத்த போதிலும், அது ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் தத்துவ மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளுடன் சிறிதளவும் தொடர்பு கொண்டதாக இருக்கவில்லை. பரந்து விரிந்த ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பற்ற மரபுகள் என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, ஆணாதிக்க பழமைவாதம், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஹிந்துக் கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் என்பதாகக் கட்டமைத்து, அவற்றோடு தன்னை இணைத்துக் கொண்டதாகவே ஹிந்துத்துவா உருவானது.மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்து வந்தது. தான் கொண்டிருந்த உள்ளார்ந்த தீவிர பழமைவாத உலகக் கண்ணோட்டத்தின் வழியாக தாராளவாத, முற்போக்குக் கொள்கைகளை அது எப்போதும் எதிர்த்து வந்தது. இந்திய அரசியலமைப்பை மாற்றியமைக்கவும், இந்திய மூவர்ணக் கொடியை காவிக் கொடியாக மாற்றுவதற்குமான கனவுடனே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தென் மற்றும் கிழக்கு இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஹிந்து தத்துவத்தை விட, ஹிந்தி-ஹிந்துஸ்தான் என்கிற ஹிந்து தத்துவத்தின் வடிவமானது மிக உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பன்முகத்தன்மை என்பது மதம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சீரழிப்பதாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

ஜியோனிசத்தைப் போல…
அடையாளப்படுத்தல், பிரதிநிதிப்படுத்துதல் மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, ​​ஹிந்து ராஷ்ட்ரத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் உண்மையில் ஹிந்துத்துவ ராஷ்ட்ரம் என்பதாகவே இருக்கிறது என்பதை ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். ஹிந்து நலன்களை விட, ஹிந்துத்துவ நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் ஆகியவற்றின் பிரதான கருத்துகளாக இருக்கும் சத்தியம், அஹிம்சை மற்றும் முன்வினைப்பயன் ஆகியவற்றை ஹிந்துத்துவத் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் இப்போது நம்புகிறார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஹிந்து தத்துவம்/சனாதன தர்மத்துடன் ஹிந்துத்துவத்தை குழப்பிக் கொள்ளக் கூடாது. ஹிந்துத்துவம் என்பது மதம் சார்ந்த கருத்து கிடையாது. ஜூடாயிசத்தின் தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தமாக ஜியோனிசம் இருப்பதைப் போலவே, ஹிந்துத்துவா என்பது தீவிர வலதுசாரி அரசியல் சித்தாந்தமாக இருக்கிறது.

எந்தவொரு அரசியல் சித்தாந்தத்தின் முக்கிய நோக்கமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவே இருக்கும். வலதுசாரிச் சிந்தனைகள், மற்றபிற மிதவாத, தாராளவாத மற்றும் முற்போக்கான கொள்கைகள் செய்யாத வகையில், மதத்தை சுரண்டுவதாக இருக்கின்றன. ஹிந்துத்துவத்தை ஒருவர் ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பது அவர் ஹிந்து தத்துவத்தை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதாக இருக்கவில்லை. அரசாங்கத்தை ஒருவர் ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பது அவர் இந்தியாவை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதாக இருக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்ப்பதற்கான அதிகாரத்தை ஜனநாயகம் மக்களுக்குத் தருகிறது. மக்களுக்கான இந்த அதிகாரம் நீர்த்துப்போகும்போது, ​​ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான சர்வாதிகாரமாக மாறி விடும்.

அரசாங்கம் என்பது நாடு அல்ல; அதைப் போல ஹிந்துத்துவா என்பது ஹிந்து தத்துவம் அல்ல. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கத்தை அல்லது ஹிந்துத்துவச் சிந்தனைகளை எதிர்க்கிறவர்களை தேச விரோதிகள், ஹிந்து விரோதிகள் என்று கூறுகின்ற நடைமுறை உண்மையில் அபத்தமானது. அது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்களைப் பிளவுபடுத்த மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட ஒற்றைமயமாக்கல் சார்ந்த உளவியல் நடவடிக்கை ஆகும்.நமது நாட்டில் இருக்கின்ற ஹிந்துத்துவாவை ஆதரிக்காத ஹிந்துக்கள் என்பவர்கள், தீவிர வலதுசாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நம்புவதைப் போல எந்த வகையிலும் குறைவான ஹிந்துக்கள் அல்லர், ஹிந்துத்துவாவை ஆதரிக்காத ஹிந்துக்களை செக்குலர்கள், தாராளவாதிகள், இடதுசாரிகள் என்றும், இன்னும் பல வகைகளிலும் அவர்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். நாட்டில் உள்ள தனது சொந்த குடிமக்களுக்கும், தன்னுடைய சித்தாந்தத்தை ஏற்காத சக ஹிந்துக்களுக்கும் எதிராக இந்த ஹிந்துத்துவாப் படை தீவிரமாகப் போராடி வருகிறது. தங்களோடு உடன்படாத மக்களை அவர்கள் தங்களுடைய எதிரிகளாக்குகிறார்கள்.

வரையறை திணிப்பு…
ஹிந்து தத்துவம்/சனாதன தர்மம் என்பது மிகவும் பரந்து வேறுபட்டது, இந்தியாவில் ஹிந்து தத்துவம் என்பதற்கு எந்தவொரு குறிப்பிட்ட வரையறையும் இல்லை என்பதோடு, அவ்வாறான வரையறை ஒன்றைத் திணிக்கவும் முடியாது. அதனால்தான் உச்சநீதிமன்றம் ஹிந்து தத்துவம் என்பதை ஒரு வாழ்க்கை முறை என்பதாக வரையறுத்தது. இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் தங்களுடைய நடைமுறைகளையும், உலகக் கண்ணோட்டத்தையும், தாறுமாறான கொள்கைகளையும் பின்பற்றுமாறு மாற்றியமைக்க எண்ணுகின்ற ஹிந்து-ஹிந்துஸ்தான்-ஹிந்துத்துவா படையினரின் சமூக, கலாச்சாரப் பணி என்பது நிச்சயம் தோல்வியடையும். இந்தியா என்பது பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல வேறுபாடுகளுடன் சமரசம் செய்து கொண்ட நாடாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சியோ, மத அமைப்போ, மொழி சார்ந்த பண்பாட்டுக் குழுவோ ஹிந்துமதத்தின் ஏகபோகப் பாதுகாவலராகத் தங்களைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது தங்களுடைய வழிமுறைகளைத் திணிக்க விரும்பும் போது, ​​ பிராந்திய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையைக் குலைப்பவர்களாக, நமது நிலத்தின் பாரம்பரிய நாகரீக உள்ளுணர்வை மீறுகின்றவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் நமது ஒட்டு மொத்த முன்னேற்றமும் உலகோடு ஆழமாகத் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் வேளையில், மனித நேயத்தைப் பிடுங்கியெறிவதாக இருக்கும் “இறை-தேசியவாதம்” என்று அழைக்கப்படுகின்ற இறைபக்தியுடன் கலந்த தேசியவாதம் என்பதன் மூலம் தேசபக்தியை எவராலும் வரையறுக்க முடியாது. தான் தேசத்தை நேசிப்பதாகக் காட்ட விரும்புகின்ற ஒருவர், அதற்காக தனது சக குடிமக்களாக இருக்கும் சில குழுக்களை இலக்காகக் கொண்டு வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில், சமூக, கலாச்சார மற்றும் வகுப்புவாதப் பதற்றங்கள் இந்தியாவைத் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் இருந்து திசை திரும்ப வைப்பதாகவே இருக்கும்.ஹிந்துத்துவத்தை ஹிந்துத் தத்துவம் என்பதாகவும், ஹிந்துத்துவ தேசியவாதத்தை இந்தியத் தேசியவாதமாகவும் தவறாகப் புரிந்து கொள்ளுபவர்கள், தாங்கள் அறியாமலேயே ஆதரித்து வருகின்ற கொள்கைகள், விழுமியங்கள் மற்றும் செயல்பாடுகளின் தன்மையை முழுமையாக ஆராய வேண்டும், மேலும் அவற்றை ஹிந்து தத்துவம்/ சனாதன தர்மத்தின் முக்கியமான ஆன்மீக மற்றும் தத்துவார்த்தக் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: டெய்லி ஓ.இன் இணைய ஏடு
தமிழில்: பேரா.தா.சந்திரகுரு

Leave A Reply

%d bloggers like this: