தஞ்சாவூர்;
ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தருமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு நரிக்குறவர் இன மக்கள் சிஐடியு தலைமையில் முறையீடு செய்தனர்.

தஞ்சாவூரில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நரிக்குறவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பசுபதி கோவில் ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் பூர்வீக தொழிலான ஊசி, பாசி, மணிமாலை மற்றும் இதர பொருட்களை வாங்கி, பல்வேறு இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு சர்வே எண் 518 ன் கீழ் 16 நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தை தற்போது சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இடம் குறுகி விட்டது. ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் நரிக்குறவர் இன மக்களை மிரட்டியும், கீழ்த்தரமாக பேசியும் வருகின்றனர். தற்போது குடியிருக்கும் எஞ்சிய இடத்திலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். பசுபதி கோவில் ஊராட்சியில் பலமுறை கேட்டும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இம்மக்களின் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, அடிப்படை வசதிகளுடன் கூடிய தொகுப்பு வீடு கட்டித் தருமாறும், இவர்கள் தொழில் தொடங்க வசதியாக வங்கி கடன் வசதி செய்து தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக குந்திபாய், செல்வி, சுமதி, மிட்டாபாய் உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்பொழுது முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், தையல் தொழிலாளர் சங்கத் தலைவர் மருதகாசி சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் கே.அன்பு, நரிக்குறவர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: