பொள்ளாச்சி, நவ.13-
பொள்ளாச்சி அருகே அருந்ததிய மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை அபகரிக்க முயலும் சாதிய ஆதிக்க சக்தியினர் மீதும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் கிராமத்தில் தலித் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஐவருக்கு சொந்தமான 6 ஏக்கர் (பட்டா எண் ; 584, மற்றும் 340- 263 ல் க.ச.எண் 14/2-, 93/2,93/3 ) விவசாய நிலம் உள்ளது. தாட்கோ நிறுவன கடன் மூலம் வாங்கப்பட்ட இந்நிலத்தில் அச்சமூக மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள இருந்த நிலையில் அங்குள்ள சாதி ஆதிக்கசக்தியினரான வேலுமணி, பழனிச்சாமி மற்றும் ரூக்குமணி ஆகியோர் அந்நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அருந்ததியின மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வந்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கோட்டூர் காவல்துறை அதிகாரிகளே, சாதிய ஆதிக்க சக்தியினருக்கு ஆதரவாக அருந்ததிய மக்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்கள் கடந்த செப்.28ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். ஆனால், இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாதிய ஆதிக்க சக்தியினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அருந்த
தியின மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி ஆகியோர் தலைமையில் திங்களன்று சார் ஆட்சியர் அலுவலத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக சார் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: