கல்வியை சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யும் உலக வர்த்தக அமைப்பு (வுட்டோ) பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்க அரசுக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களை அரசே தன் பொறுப்பில் தொடங்கி நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஞாயிறன்று (நவ.12) நடைபெற்ற ‘கல்வியின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்’ தொடர்பான தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய – மாநில அரசுகளை நோக்கி இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அரசமைப்பு சாசனத்தின்படி மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு, மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்கவியலாது என்று உச்சநீதிமன்றம் ‘மாடர்ன் பல் மருத்துவமனை’ வழக்கில் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது. சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத்துறை நிலைக்குழு அறிக்கையில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுட்டிக்காட்டி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் அவரது ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில், அரசுப் பள்ளியில், குறிப்பாகத் தாய்மொழியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நிறைவுரையாற்றிய அகில இந்திய கல்வி உரிமைக் கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜி. ஹரகோபால், “லாபம் குவிப்பதிலேயே குறியாக இருக்கும் உலகளாவிய சந்தை சக்திகளிடம் கல்வியை மத்திய அரசு தாரை வார்த்துவிட்டது,” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய பாஜக அரசு பொதுக்கல்வி நிலையங்களையும் அழிக்க முயல்கிறது. அலிகார், ஹைதராபாத், கொல்கத்தா, ஜாதவ்பூர் உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களும் தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றன என்றார் அவர். நல்லிணக்கமும் பன்முகத்தன்மையும் உள்ள சமுதாய அமைப்புக்காகப் போராடியாக வேண்டும். வட்டாரப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கப் போராடியாக வேண்டும். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் தமிழகத்தில் நடைபெறுகிற ‘நீட்’ எதிர்ப்பு இயக்கம் என்றும் அவர் கூறினார்.

கருத்தரங்கை நடத்திய ‘நீலம் பண்பாட்டு மையம்’ அமைப்பின் பொறுப்பாளர் இயக்குநர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது தொடுக்கப்படும் பல்வேறு தாக்குதல்களைக் குறிப்பிட்டார்.

“சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைந்ததுதான் கல்வி உரிமைப் போராட்டமும். சாதியை ஒழிக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை. இந்த இயக்கம் ‘நீட்’ எதிர்ப்போடு நின்றுவிடக்கூடாது. சமத்துவமான கற்றல் வாய்ப்புக்கான தொடர்ச்சியான இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பல்வேறு துறைகளைச் சார்ந்தோரிடம் கையொப்பம் பெற்று தீர்மானத்தை ஒரு மனுவாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் அளிப்பது என்று கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: