ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்களை வழங்கிய அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இது தொடர்பாக  ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது இட்லி சாப்பிட்டதாகவும், வழக்கமான உணவு எடுத்ததாகவும் சசிகலா எங்களிடம் சொல்ல சொன்னதை அவருடைய மிரட்டலின்  காரணமாக பொய் கூறியதாகவும் கூறினார். மேலும் அதற்கு மன்னிப்பும் கோரினார்.

இதைப்போல்  அமைச்சர் கே.சி.வேலுமணி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்று கூறினார். இவர்களின் இந்தப் பேச்சு அவர்கள் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறுவதாக உள்ளது.  எனவே,  இருவரையும் அமைச்சர் பதவிலிருந்து நீக்க ஆளுநர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை திங்களன்று (நவ. 13) விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, ‘‘ஏற்கனவே இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. மேலும் இது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று .கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply