கருப்புப் பணம் மீட்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பாஜக பெருந்தோல்வி அடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.

சென்னையில் திங்களன்று (நவ.13) செய்தியாளர் சந்திப்பில் டி.ராஜா கூறியது வருமாறு:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் நடைபெற வேண்டும். குஜராத் தேர்தலை காரணம்காட்டி கூட்டத்தொடரை நடத்தாமல் இருக்கவும் அல்லது குறுகியகாலம் மட்டுமே நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது நாடாளுமன்றத்தைச் சிறுமைப்படுத்துவதாகும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.  நாடாளுமன்றம் செயலூக்கத்துடன் செயல்படக் குறைந்தது 100 நாட்கள் நடத்த வேண்டும்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் போன்றவற்றால் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது; பொருளாதார துறைகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. நிறுவனங்கள் கதவடைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. வேலைவாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது. மக்களிடத்தில் நிச்சயமற்ற, நம்பிக்கையற்ற எதிர்காலத்தை பாஜக உருவாக்கிவிட்டது. ஊழல் ஒழிப்பு என்பது பாஜக அரசின்  வாய்ச் சவடாலாக உள்ளது. குஜராத் தேர்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருவதால் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர்.

உள்நாட்டில் கலவரச் சூழல்
சங் பரிவாரங்கள் சமூக, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து வருகின்றன. அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றன. அண்மையில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரை ராஜஸ்தானில் கொன்றுள்ளனர். பசுவதை என்று கூறி வன்முறையில் ஈடுபடுகின்றனர். வளர்ப்பு பிராணியான மாட்டை வன்முறைக் கருவியாக பயன்படுத்துகின்றனர். உள்நாட்டிற்குள் கலவரச்சூழலை உருவாக்கி வருகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி உணவு உண்டதாக 5மாணவர்களுக்குத் துணைவேந்தர் அபராதம் விதித்துள்ளார். சைவ உணவு உண்பவர்களுக்குத்தான் தங்கப்பதக்கம் என்று பூனா பல்கலைக் கழகம் கூறுகிறது. மதவெறி அரசியலை முன்னிலைப்படுத்தி பாசிச நடவடிக்கைகளை சங்பரிவாரங்கள் மேற்கொண்டுள்ளன. இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இத்தகைய பாசிச அரசியலை முறியடிக்க இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

மண்டியிட்டுக் கிடக்கும் மாநில அரசு
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியை நிவாரணம் வழங்குவதற்கும் எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட மழை, புயல் சேதத்திலிருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் மாநில அரசு கோரிய வறட்சி, வெள்ள நிவாரணத்தையே மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இந்நிலையில் பிரதமர் தமிழகத்திற்குத் தேவையான நிவாரணத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார். மாநில அரசு அதனைப் போராடி பெறுமா? அல்லது மண்டியிட்டே கிடக்குமா?
மாநில அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆட்சி செய்வதற்கான தார்மீக உரிமையை அதிமுக இழந்து விட்டது. அதிமுக-விற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. இத்தகைய நேரத்தில் வருமான வரித்துறை குறிப்பிட்ட ஒருசாரார் மீது மட்டும் ரெய்டு நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்.

அகில இந்திய மாநாடு
சிபிஐ அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் மாதம் 25-29 தேதிகளில் கேரளா மாநிலம் கொல்லம் நகரில் நடைபெற உள்ளது. மாநில மாநாடு மார்ச் மாதம் இறுதியில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் சில அறிவார்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: