கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான தீத்திபாளையம் உலகாந்தம்மன் கோவில் பகுதியில் இருந்து மஞ்சிப்பள்ளம் என்கிற நொய்யல் உபரி நீர் ஓடை உற்பத்தியாகி குரும்பபாளையம், பாலத்துறை, நாச்சிபாளையம், குமிட்டிபதி, வேலந்தவளம் ஆகிய ஊர்களின் வழியாக சென்று கேரள மாநிலத்திற்குள் பெரும் ஆறாய் மாறி செல்கிறது இந்த மஞ்சிப்பள்ள ஓடை. இந்த ஓடை செல்லும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் ஓடை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

மேலும், இந்த ஓடையின் நீரை சேமித்து வைக்க வேலந்தவாளத்தில் ஒரு செக் டேமும், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செக்டேம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததால் அப்பாலம் தற்போது வரை எம்ஜிஆர் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஓடை பெரு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அழித்தொழிப்பு நடவடிக்கையால் தனது அடையாளத்தை இழந்து அழிந்து வருகிறது. தற்போது சிறு கோடாய் தெரியும் இந்த ஓடையில் க்ரசர் நிறுவனங்கள் ஆளும் கட்சியின் ஆசியோடு ஓடையின் ஒருபகுதியை ஆக்கிரமித்தும், கழிவுகளை கொட்டியும் ஓடை இருப்பதை இல்லாமல் செய்துவிட்டது.

குறிப்பாக, உள்ளூர் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி இல்லம் உள்ள சுகுணாபுரம், மயில்கல்லின் அருகே பெயர்ப்பலகை வைக்கப்படாத க்ரசர் நிறுவனம் ஒன்று ஜல்லிக்கற்களை அரைத்து எம்சென்ட் மணல் உற்பத்தி செய்து வருகிறது. காவல்துறையின் சோதனைச் சாவடியின் அருகே உள்ள இந்நிறுவனம் நாள்தோறும் வெளியேற்றும் கழிவுகளை இந்த மஞ்சிப்பள்ள ஓடையில் கொட்டி வருகிறது. இதன் காரணமாக இந்த ஓடை தற்போது தடம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியின் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ஒரு காலத்தில் குனியமுத்தூர் துவங்கி கேரள மாநில எல்லைவரை விவசாயப் பகுதியாக இருந்த இந்த இடம் தற்போது பாலைவனத்திற்கு ஈடான இடமாய் மாறிவருகிறது. குடி தண்ணீருக்கே லாரியை எதிர்பார்த்து தவம் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பல ஓடைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. காரணம் இங்குள்ள ஏராளமான க்ரசர் நிறுவனங்கள் இதன் கழிவுகளை முறையாக வெளியேற்றுவதற்கு பதிலாக இந்த மஞ்சிப்பள்ள ஓடையில் கொட்டி வருவதே. அமைச்சர் வீட்டின் அருகே உள்ளதும், அமைச்சருக்கு நெருக்கமானவர்தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்கிற தகவலால் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் புகார் கொடுப்பதற்கே அச்சமாக உள்ளது என்றார்.

மஞ்சிப்பள்ளம் கழிவுகள் கொட்டும் பள்ளமாய் மாறிவருவது குறித்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்பு கொள்ள முயன்றால், அவர் மழைநீர் வடிகாலுக்கு தீர்வு காணவும், வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை ஆய்வு செய்யவும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்கிற தகவல் வந்தது.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

என தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் வரப்புயர்த்துவதற்கு மாறாக இயற்கையை அழித்து இயன்றவரை சுருட்டுவது என்ற அவலமே அரங்கேறி வருகிறது.
– அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.