உடுமலை , நவ.12-
ஆனைமலை நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சிபிஎம் உடுமலை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய மாநாடு ஞாயிறன்று பாலப்பட்டியில் வாளவாடி எஸ்.மணி, குரல்குட்டை பெ.ராமகிருஷ்ணன் நினைவரங்கத்தில் (செல்வ விக்னேஷ் திருமண மண்டபம்) நடைபெற்றது. மூத்த தோழர் எஸ்.செல்லமுத்து கொடியேற்றி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினா உ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இதைத்தொடர்ந்து ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

தீர்மானங்கள்:
இம்மாநாட்டில், திருமூர்த்திமலை, அமராவதி அணைகளை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அணைகளில் போதிய தண்ணீர் உள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு கமிட்டிகளாக பிரிப்பு: முன்னதாக, இம்மாநாட்டில் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழுவானது உடுமலை ஒன்றியம் மற்றும் மலை அமைப்புக்குழு என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் உடுமலை ஒன்றிய கமிட்டிக்கு புதிய செயலாளராக கி.கனகராஜ் மற்றும் உடுமலை மலை அமைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜி.செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் மாலையில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீமானங்களை விளக்கி பாலப்பட்டியில் பொதுகூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.