அருண் குமார் சமூக அறிவியல் நிறுவனத்தில் உள்ள மால்கம் ஆதிசேஷையா இருக்கையில் பேராசிரியர். விரைவில் வெளிவரவிருக்கும் ’பணமதிப்பு நீக்கமும், கறுப்புப் பொருளாதாரமும் என்ற புத்தகத்தின்  ஆசிரியர்.

2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, சில மாதங்களுக்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் இன்னலுக்குள்ளாகி சிரமப்பட்டனர். வேலையை இழந்து, தொழில்கள் நலிந்து, வருமானம் சரிந்து விட்ட நிலையில், அதை இன்னும் தங்களின் நினைவில் அவர்கள் வைத்துள்ளனர்,

திடீரென அறிவிக்கப்படும் பணமதிப்பு நீக்கம் கறுப்புப்பண சிக்கலைத் தீர்க்காது என்பது மட்டுமல்லாது, அது வெள்ளைப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்பது கோட்பாட்டளவில் அறியப்பட்டது, நடைமுறையிலும் அதுதான் இப்போது நடந்தது. முறைசாராத தொழில்களில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையின் தாக்கத்தினால், வெள்ளைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியடைந்தது. முறைசார்ந்த தொழில்களும்கூட இதனால் பாதிக்கப்பட்டன, ஆனால் காசோலைகள் மூலமாகவும், மின்னணு முறை கொண்டும் பணப் பரிவர்த்தனைகளை இவர்களால் செய்ய முடியும் என்பதால், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறைவானதாகவே இருந்தது. இந்தப் பணப் பற்றாக்குறை, கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளை விட, நகரங்களில் மிக விரைவாகக் குறைந்ததால், இவர்கள் விரைவாக மீண்டெழுந்தனர்.

மொத்தம் புழக்கத்தில் இருந்த பணமதிப்பு நீக்கம் செய்யப்ப்ட்ட 15.44 லட்சம் கோடி ரூபாயில், மூன்று முதல் நான்கு லட்சம் கோடி ரூபாய் திரும்பவும் வங்கிகளுக்கு வராது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அளித்திருக்கும் தகவல்களின்படி, பழைய பணத்தாள்களில் 99% திரும்ப வந்துள்ளது, எனவே 15,000 கோடி ரூபாய் மட்டுமே பழைய பணத்தாள்கள் பொதுமக்களிடம் தங்கி உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மீண்டும் திரும்ப வரக் கூடியவையாகவோ அல்லது கணக்கில் காட்டப்படுபவையாகவோ இருக்கலாம். கள்ளப் பணத்தாள்கள்  வங்கிகளில் பெறப்பட்டு, அவற்றையும் சேர்த்து இந்தத் தொகை கணக்கிடப்பட்டிருப்பதால், வங்கிகளால் 15.44 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிய வரலாம். அப்போது அது வெட்கப்பட்டுத் தடுமாற வேண்டியிருக்கும். 

சிறிதளவு பணம் திரும்பப் பெறப்படவில்லை என்றால்கூட, அதன் மூலமாக, கறுப்புப் பணத்தைத் தங்களால்  கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக அரசாங்கத்தால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். ரிசர்வ் வங்கியின் வரவு செலவுத் திட்டத்தில் அந்தத் தொகை ஈவுத் தொகையாக மாற்றி சேர்க்கப்பட்டிருக்கலாம் – அது பணமதிப்பு நீக்கத்தின் மூலமாகக் கிடைத்த உண்மையான ஆதாயமாக இருந்திருக்கும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ அல்லது ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியங்களை அதிகரிப்பதற்கோ அந்தத் தொகை உதவியிருக்கும். மோசமான பணக்காரர்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்கியதாக, ராபின் ஹுட் போன்றதொரு படிமத்தை பிரதமருக்கு அது ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.

பணக்காரர்களும், ஏழைகளும் ஒரே வரிசையில் வங்கிகளுக்கு முன்பு நிற்பதாக பொதுக்கருத்து ஒன்றினை இட்டுக் கட்டியதன் மூலம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட படிமங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டன. ஊழலில் தோய்ந்திருக்கும்  அமைப்புகளின் மூலமாக பணக்காரர்கள் அதிக லாபம் அடைந்துள்ளார்கள் என்று பணக்காரர்களுக்கு எதிரான ஆத்திரம் ஏழைகளிடம் அதிக அளவில் இருந்தது. பணக்காரர்கள் யாரும் எந்த வரிசையிலும் வந்து நிற்கவில்லை என்றாலும்கூட, அந்தப் பணக்காரர்களே பணமதிப்பு நீக்க அறிவிப்பின் மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டதாக கட்டமைக்கப்பட்ட உணர்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. ஆனாலும் இறுதியாக அந்த மோசமான பணக்காரர்களுக்கே இதன் மூலம் நியாயம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏழைகளோ தங்களுக்கு. உடனடியான நியாயம் கிடைத்திருக்கிறது என்ற கற்பனைக் காரணத்திற்காக, தங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வலிகளை மறந்து விடத் தயாராக இருந்தனர். . 

ரொக்கமாக 99% பணம் வங்கிகளுக்குத் திரும்பி வந்தது அரசாங்கத்திற்கு ஒரு நன்மையை ஏற்படுத்திக் கொடுத்தது. கறுப்புப் பணத்தைச் செலுத்தியவர்கள், தங்களுடைய பணத்திற்கான ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இப்போது பிடிபட்டு விடுவார்கள் என்பதாகக் கூறி அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டு விடுவோம் என்று அவர்கள் பயப்பட்டதால், வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்ற வாதத்தையும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்வைத்தார்கள். இருப்பினும், புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருப்பவர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரவில்லை. அவ்வாறு புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 91 லட்சம் என்று நிதியமைச்சர் சொன்ன வேளையில், செங்கோட்டையின் உச்சியிலிருந்து 56 லட்சம் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால் அரசின் பொருளாதார ஆய்வறிக்கையோ அது வெறும் 5.4 லட்சம் என்று தெரிவித்தது. 3,500 கோடி ரூபாய் கூடுதலாக, அதாவது நேரடி வரிகளில் 0.3% கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பது, கறுப்புப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் எதுவும் நிகழவில்லை என்பதையே காட்டுகிறது.

கணக்கில் காட்டப்படாத வருவாயை உருவாக்க மக்கள் இனிமேல் பயப்படுவார்கள் என்று இன்னொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான சாத்தியம் என்பது இல்லை, ஏனென்றால் இப்போதே அவர்களால் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றால், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்ய முடியும். கணக்கில் காட்டப்படாத வருமானங்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அச்சத்தை பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஏற்படுத்தவில்லை.

தேவைகள் குறைந்து வருவதால், திறன் பயன்பாட்டுத் தன்மையும் குறைந்து, நாட்டின் முதலீட்டுச் சூழல் சீரழிந்துள்ளது. ஷெல் நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களை மூடுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், பணமதிப்பு நீக்கம் வெற்றி பெற்றிருப்பதாகக் காட்டிக் கொள்ள அரசாங்கம் முற்படுகிறது. இவை அனைத்தும் கண்மூடித்தனமாகச் செய்யப்படுகின்றன., கணினி மூலமாக செயற்படுத்துதல், கண்மூடித்தனமாக அறிவிப்புகளை வெளியிடுதல் என்று பெரும் தரவு பகுப்பாய்வுகளின் மீது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

முக்கியமான விஷயங்களில் மோசடிகள் செய்யப்படுவதைக் கண்டுபிடிப்பதற்கு மனிதனுடைய நேரடி நியாயம் தேவைப்படுவதாக இருக்கிறது. அவற்றைக் கண்டறிவதற்கான அரசாங்க இயந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாதாரணமான காலங்களில் இருக்கின்ற வேலையையே அதனால் கையாள முடியாது என்றிருக்கும் நிலையில், இப்போது அதிகரித்திருக்கும் கூடுதல் சுமைகளைக் கையாள்வது என்பது மிகச் சிரமமான காரியமாகும்.  எனவே இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் இருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே தொழில்கள் எதிர்கொண்டிருக்கின்ற நிச்சயமற்ற நிலையை இத்தகைய அறிவிப்புகள் அதிகமாக்கும் என்பதால், முதலீட்டிற்கான சூழல் பாதிக்கப்படுவது மேலும் அதிகரிக்கும்.

வங்கிகளில் கூடுதலாகப் பெறப்பட்டிருக்கும் தொகையினால் அதிகரித்திருக்கும் பணப்புழக்கத்தின் காரணமாக, வங்கிகளுக்கு நன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்களும் அவ்வாறே குறைத்தார்கள். ஆனாலும் நிலையான வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதங்களையும் சேர்த்தே அவர்கள் குறைத்தார்கள். வட்டி மூலமாகக் கிடைக்கும் வருவாய் வீழ்ச்சியடைந்ததால், பரஸ்பர நிதிகள் மூலமாக பங்குச் சந்தைகளுக்கு தங்களுடைய பணத்தை வாடிக்கையாளர்கள் திருப்பி விட்டனர். இதன் விளைவாக நிதிச்சந்தைகள் மிகவும் நிலையற்றதாகி இருக்கிறது. பொருளாதாரம் வீழ்ச்சியுற்றாலும், சந்தைகள் உயர்ந்து, ஊகக் குமிழி உருவானது. பங்குகளுக்கான விலை – வருவாய் ஆகியவற்றிற்கிடையில் உள்ள விகிதம் முந்தைய அளவுகளை விட அதிகமாக உயர்ந்தது. எனவே இந்த நிதிகளில் இருந்து பெறப்படும் வருமானம் மூலதன மதிப்பீட்டின் அடிப்படையில் இருந்ததே தவிர, லாபத்தின் மூலமாக கிடைக்கின்ற ஆதாயப் பங்கினால் ஏற்பட்டதாக இருக்கவில்லை. இந்தக் குமிழி விரைவிலேயே வெடித்து, பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

இதனால் ஏற்படும் வலி குறுகிய கால அளவிலானதாகவே இருக்கும், நீண்டகால அளவில் பார்த்தால் இதன் மூலம் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அரசாங்கம் கூறியது, எனினும், ஏற்பட்ட வலி ​​குறுகிய காலத்திற்கு மட்டும் இருக்கவில்லை. பிரதமர் கொடுத்த கெடுவான டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் தொடர்ந்தது. வேலைகளை இழப்பது, உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படுவது,  பணத்திற்காக வங்கி வாசல்களில் வரிசையில் நிற்பது போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரத்தில் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் சமூக அளவிலும் இருந்தது.

தங்களுடைய பரிவர்த்தனைகளுக்காக ரொக்கப் பணத்தையே சார்ந்திருந்த முறைசாராத் தொழில்களுக்கு, பணத்தாள்களின் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்பு, மிகவும் கடுமையானதாக இருந்தது,. அந்தக் காலகட்டத்தில் வெளியான அறிக்கையின்படி, 50% முதல் 80% வரையில் அவை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக மாறியது. அரசாங்கத்தால் அளிக்கப்படும் தரவுகள், 7% வளர்ச்சி தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்தன. ஏனெனில் இந்தத் தரவுகள் முறைசாராத் தொழில்களை உள்ளடக்கியதாக இருப்பதில்லை. இதற்கிடையில், முறைசார்ந்த தொழில்துறைகள் பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி, முறைசாராத் தொழில்களின் வளர்ச்சி விகிதத்தை முன்வைக்கிறார்கள். இது மிகவும் தவறான வழிமுறையாகும். நவம்பர் 7ஆம் தேதி வரையிலும் செல்லுபடியான வழிமுறைகள் நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகான காலத்திற்குச் செல்லுபடியாகாது.

வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக மாறி, திறன் பயன்பாடு குறைந்ததனால், முதலீடுகள் முந்தைய ஒன்பது காலாண்டுகளை விட மிகக் குறைவாகவே இருந்தன. இது நீண்ட கால அளவிற்கு வளர்ச்சியைக் குறைப்பதாகவே இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், பணத்தாள்களின் பற்றாக்குறை குறுகிய கால விளைவுகளை ஏற்படுத்துவதை விடுத்து, நீண்ட காலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கறுப்புப் பொருளாதாரத்திற்கு எதிராகச் செயல்படவில்லை என்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் தனது இலக்குகளை மாற்றிக் கொண்டு, இந்த நடவடிக்கைகள் “பணமில்லாத” பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் என்பதாக வாதிட ஆரம்பித்தது. மிக விரைவிலேயே, `குறைந்த பணம் கொண்ட’ பொருளாதாரம் என்று அதனை மாற்றிக் கொண்டது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள்  இல்லாமலேயே தனியாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நம்பகமான இணைய இணைப்பு, தடையற்ற மின்சாரம், பிற உள்கட்டமைப்புகள் போன்றவற்றை இதற்காக வழங்குவதற்கு நிறைய தயாரிப்பு வேலைகள் தேவைப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த டிஜிட்டல் பரிமாற்றங்களைப் பயன்படுத்துவது பற்றி மக்கள் மிக வசதியாக உணர்கிற வகையில், அவர்களிடம் நிதி குறித்த அறிவு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான தேவையும் இருக்கிறது.

ஆக கறுப்புப் பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது, இந்த பணமதிப்பு நீக்கத்தின் காரணமாகப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நன்மைகள் மிகச் சிறிய அளவிற்கே இருக்கின்றன. அந்த நன்மைகளும்கூட, பணமதிப்பு நீக்கத்தை அறிவிக்காமலேயே, மக்களுக்கு எந்தவிதமான இன்னல்களையும் அளிக்காமலேயே பெற்றிருக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவின் காரணமாக 2016-17க்கான  பொருளாதாரம் பூஜ்ஜிய வளர்ச்சி விகிதத்தைக் கண்டிருந்தால், பொருளாதாரம் 7% வளர்ச்சியை, அதாவது 10 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது. வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிகளுக்கும் ஏற்பட்ட செலவுகளையும் இந்த இழப்போடு சேர்த்தால், அது இன்னும் அதிகரிக்கக் கூடும்.

மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பினை பணமதிப்புகளால் அளவிட முடியாது. மக்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் பணத்தின் மீதான நம்பகத்தன்மை அழிக்கப்பட்டிருக்கிறது. முறைசார்ந்த தொழில் நிறுவனங்கள், முறைசாராத் தொழில்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள பிளவு அதிகரித்திருக்கின்றது. இது பெருமளவிலான மக்கள் ஓரங்கட்டப்படுகின்ற நிலைமையை உருவாக்கி, நமது ஜனநாயகத்தின் தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.  எந்தவொரு கணக்கில் காட்டப்படாத வருவாயையும் இதுவரையிலும் உருவாக்கி இருக்காதவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர், அதே நேரத்தில் கறுப்புப் பணத்தை உருவாக்கியவர்கள் எந்தவொரு விளைவுகளையும் சந்திக்காது தப்பித்திருக்கின்றனர்.

பெரும்பாலான கணக்கில் காட்டப்படாத வருமானங்கள் முறைசார்ந்த துறைகளாலேயே உருவாக்கப்படுகின்றன. முறைசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்களின் வருமானம் குறைவானதாக, அதாவது வரிவிதிப்பிற்கு உட்படாததாக இருப்பதால், கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பது அங்கே மிகச் சிறிய அளவிலேயே உருவாகிறது. எனவே அவர்கள் தங்களுடைய வருமானத்தைக் காட்டா விட்டாலும், அது கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதாகாது. எனவே முறைசாராது இருப்பவர்களை முறைசார்ந்தவர்களாக  மாற்றுவது, கறுப்புப் பொருளாதாரத்தின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முறைசாராதிருப்பவர்களை விட ,முறைசார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், வெள்ளைப் பொருளாதாரத்தோடு ஒப்பிட்டால், கறுப்புப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. மாறாக கறுப்புப் பொருளாதாரம் அப்போது அதிகரித்தே இருக்கும். எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக!

https://thewire.in/195154/demonetisation-costs-monetary-value/

தமிழில்: – தா.சந்திரகுரு

Leave A Reply

%d bloggers like this: