விவசாயம் பொய்த்துப்போன நிலையில் வேலை வாய்ப்பில்லாத கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 100 நாள் வேலைவழங்கும் திட்டம் தான் ‘நரேகா’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டம். 2004 ஆம் ஆண்டு மத்தியில் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிக்கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக இத்திட்டத்தை அமல்படுத்தியது.

இதனால் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ளவேலைவாய்ப்பற்ற விவசாயத் தொழிலாளர்கள் சுமார் 11 கோடிப்பேர் பயனடைந்து வருகிறார்கள்.ஐ.மு.அரசாங்கத்தின் போது கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் இத்திட்டத்தைச் சீர்குலைக்க மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இத்திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தும் திரிபுரா போன்ற சிறியமாநிலத்திற்குக்கூட போதிய நிதியை ஒதுக்க மறுக்கிறது. தற்போது தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில், இத்திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த 20-ஆம்தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3066 கோடி எனச் சொல்லப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு வர வேண்டியது மட்டும் ரூ.200 கோடிக்கும் அதிகமாகும்.தமிழ்நாட்டில் 69.21 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.

அவர்களுக்குக் கடந்த 2மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3000முதல் ரூ.7000 வரை ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கிராமப்புற குடும்பங்களுக்கு இத்தொகை மிக மிக முக்கியமானது ஆகும். இதனால் ஏழை மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மத்திய அரசிடம் கேட்டால் இந்தத் திட்டம்குறித்த தணிக்கை அறிக்கையை மாநிலங்கள்அனுப்பவில்லை. எனவே நிதியை விடுவிக்கமுடியாது என்கிறது. பயனாளிகளின் ஊதியக் கணக்குகளை மத்திய அரசுக்கு அனுப்பி, அதற்கான நிதியைப் பெறுவதிலும் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்குப் பிறகும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம்தான் என்றும் மாநிலங்கள் கூறுகின்றன.

மத்திய அரசு நிதி வரும் வரை மாநில அரசுகள்தன்னுடைய சுழல் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேலை செய்து விட்டு கூலிக்காக காத்திருக்கும்ஏழை, எளிய மக்களை அலைக்கழிப்பதை அனுமதிக்கமுடியாது. தணிக்கை அறிக்கை வந்தால் தான் தொடர்ந்து நிதிஒதுக்கப்படும் என்று மத்தியஅரசு கூறுவது நியாயமல்ல. விரைந்து கூலிவழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுஅக்கறையுள்ள பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதையே அரசு அறிவுரையாக எடுத்துக்கொண்டு மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்கவேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.