புதுதில்லி, நவ. 9-

தொழிலாளர்களின் 12 அம்சக் கோரிக்கைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால், மகாமுற்றுகைப் போராட்டம், காலவரையற்ற போராட்டமாக மாறிடும் என்று சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசுகளின் மகா சம்மேளனங்கள், வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், ரயில்வே, டெலிகாம், நிலக்கரி, உருக்கு, போக்குவரத்து, பெட்ரோலியம், மின்சாரம், கப்பல் போக்குவரத்து, பொறியியல், கட்டுமானம், திட்டப் பணியாளர்கள் முதலானவர்களின் மாபெரும் மகா முற்றுகைப் போராட்டம் வியாழன் அன்று தலைநகர் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் (ஜந்தர்மந்தர்) தொடங்கியது. 11ஆம் தேதி வரை இம்முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

PHOTO: K M VASUDEVAN

‘மகாமுற்றுகைப் போராட்டம்’ மத்தியத் தொழிற்சங்கங்கள் ஒருமனதாக நிறைவேற்றிய கோரிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தைக் கோருவதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் கடந்த எட்டாண்டுகளாக கோரி வருகின்றன. கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்தால்,  அடுத்து நாடுதழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்குவதற்காக ஓரடி முன்வைப்பதற்கான போராட்டமே இந்த  ‘மகாமுற்றுகைப் போராட்ட’மாகும்.

குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, திட்டப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் தர மறுப்பதுடன் அரசாங்கம் அனைத்துத் துறைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திடவும் துடித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து நிரந்தர ஊழியர்களையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்துவருகிறது. அனைத்துத் துறைகளிலும் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்க அனுமதி அளித்திருக்கிறது.


PHOTO: K M VASUDEVAN

இவற்றுக்கு எதிராகத்தான் இந்த மகாமுற்றுகைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதற்காக தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன்மூலமாக தொழிலாளர்களை கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்த்தே இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

தபன்சென்

‘மகா முற்றுகைப்’ போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசியதாவது:

“நாம், நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்வருமானால், அதனுடன் பேச்சுவார்த்தை நடத்திட, நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால், அவர்கள் நம் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நம்முடைய உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டம் தொடரும்.

இதே இடத்தில் நின்று நாம் போராடியதன் மூலமாக எண்ணற்ற தொழிற்சாலைகள் தனியாரிடம் தாரை வார்ப்பதைத் தடுத்துநிறுத்தி இருக்கிறோம். இன்றைய தினம் உள்ள விலைவாசிப் புள்ளியில் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்திட வேண்டும். ஆனால், நாம் 18 ஆயிரம் ரூபாய்தான் கோருகிறோம். அதனை அரசாங்கம் தர மறுத்தால், நம் போராட்டம் தீவிரமாகும். இந்தத் தொழிலாளர் விரோத அரசாங்கத்தின் அடித்தளத்தைத் தகர்த்தெறிந்திடுவோம்.”

இவ்வாறு தபன்சென் பேசினார்.

‘மகாமுற்றுகைப் போராட்டத்தில்’ அசோக்சிங் (ஐஎன்டியுசி), அமர்ஜீத் கவுர் (ஏஐடியுசி), ஹர்பஜன் சிங் சித்து (எச்எம்எஸ்), ஆர்.கே. சர்மா (ஏஐயுடியுசி), ராஜீவ் திம்ரி (ஏஐசிசிடியு), அசோக் கோஷ் (யுடியுசி), தேவராஜன் (அகில இந்திய பார்வர்ட் பிளாக்), எம். பேச்சிமுத்து (தொமுசு) முதலானோரும் உரையாற்றினார்கள்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: