காந்தி ஒரு போரை அறிவித்திருக்கிறார் …

உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே ஒரு பயங்கரமான போர் தொடங்குகிறது.

இந்திய மனங்களில் புதியதொரு வலிமையை உருவாக்கி, /

முழுமையான சுதந்திரத்திற்கான பாதையை அவர் தயார் செய்துள்ளார்.

தேவன், மனுஷருடைய நியாயத் தீர்ப்புகளாகிய அவருடைய ஞானத்தினாலே,

நம்முடைய மந்தைக்கு மேய்ப்பனைப் போல மகாத்மாவை சரியாகத் தேர்வு செய்தார்.

இந்த எழுச்சிக் கவிதை மௌலானா ஜாஃபர் அலி கானால் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது எழுதப்பட்டது. ’இந்தியா சுதந்திரமடைவதற்கான நாள் வேகமாக நெருங்கி வருகிறது, அந்த வெற்றி விழாவின் போது, இந்த உலகம் முழுவதும் அவளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் எழுதியிருந்தார். (கே.சி.கந்தா, நாட்டுப்பற்று மிக்க உருது கவிதைகளின் தலைசிறந்த படைப்பு, ஸ்டெர்லிங் பதிப்பகம், புது டெல்லி, பக்கங்கள் 449)

சங் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகளாக இருக்கும் ஹிந்து மகாசபா, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றில் இருக்கும் ஏதாவதொரு உறுப்பினர் அல்லது ஆதரவாளரால், செழுமையான மாறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும், அனைவரையும் உள்ளடக்கிய இந்திய தேசியவாதத்தின் மீதான கவிதையை இவ்வாறு எழுத முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் உள்ளிட்ட மேலும் சில சமூகங்களின் உற்சாக மிக்க பங்கேற்பின் மூலமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கம் செழுமைப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட உரிமைகள், அந்தந்த மதங்களுக்கான மறுமலர்ச்சி ஆகியவற்றைக் கோருகின்ற குரல்கள் அவர்களிடம் இருந்த போதிலும், அவர்கள் அனைவரும் இந்தியாவிற்காகவே பேசினார்கள். ஆனால் சங் பரிவாரமோ அவ்வாறு மத மறுமலர்ச்சிக்கான இயக்கமாக இருக்கவில்லை, மாறாக மதத்தின் பெயரால் அரசியல் ஏணியில் ஏறி அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தைப் பெற முயன்ற இயக்கமாகவே இருந்தது.

1925 செப்டம்பர் மாதத்தில் வந்த விஜயதசமி தினத்தன்று, முன்னாள் காங்கிரஸ்காரரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் நாக்பூர் நகரில் ஆர்எஸ்எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அமைதியைக் குலைக்கும் வகையிலான அதன் செயல்பாடுகள் அப்போதிலிருந்தே அறியப்படுகின்றன. அடிப்படைக் கேள்விக்குரியதாக இருக்கும் அந்த அமைப்பின் தோற்றத்திற்கான மூலகாரணம், இதுவரையிலும் சரியான, தேவையான அளவிற்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கான பதில், அதனுடைய முழு வரலாற்றையும் விளக்குவதாகவே இருக்கும். 1925ஆம் ஆண்டில், காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இயக்கம் மேற்கொண்ட சுதந்திரப் போராட்டங்கள் அதனுடைய உச்சத்தில் இருந்தன என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழிமுறைகளின்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று ஒத்துழையாமை இயக்கத்திற்கு தங்களுடைய எதிப்புகளைத் தெரிவித்து வந்த தாராளவாதிகள் வலியுறுத்தி வந்தனர். பகத்சிங் போன்ற தேசப்பற்றாளர்களோ இந்த இரண்டு பாதைகளையும் நிராகரித்து வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

ஆர்எஸ்எஸ் ஏன்?

காந்தி, தாராளவாதிகள், வன்முறையாளர்கள் என்று இவர்களோடு முரண்பட்டோ அல்லது அவர்களால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகளின் மீது மாற்றுக் கருத்தைக் கொண்டோ ஆர்எஸ்எஸ் அமைப்பானது தோற்றுவிக்கப்படவில்லை.

அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பது, அன்னிய ஆட்சியாளர்களுடனான மோதலைக் கவனமாகத்  தவிர்ப்பது என்பதைத் தங்களுடைய உத்தியாகவே அவர்கள்  கடைப்பிடித்தனர். அப்படியிருந்த நிலையில், ​​சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் பங்கு கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, ஹிந்து மகாசபாவைப் போல சுதந்திரத்திற்கான போராட்டங்களை எதிர்த்தும் வந்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த இரு அமைப்புகளும் இந்திய தேசியவாதத்தை நிராகரித்து வந்தன. இந்தியாவின் கருப்பொருள்கள், சித்தாந்தம், மதச்சார்பற்ற, ஜனநாயகக் கொள்கைகளை நிராகரித்து, குறிப்பாக அதன் கொடி மீது ஏளனச் சொற்களை வீசி இகழ்ந்து வந்தனர்.

இந்திய தேசியவாதத்திலிருந்து தன்னை வேறுபடுத்தி, ஹிந்து தேசியவாதத்தை ஆதரித்து, மற்ற சமூகங்களை, முக்கியமாக முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் புண்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதுமே அவர்களுடைய கருத்தியல்களிலும், நடைமுறைகளிலும் உள்ளார்ந்து இருந்தது. இன்று வரையிலும், இந்த நடைமுறையை வெறித்தனமான ஆர்வத்துடன் தொடர்ந்து வருகிறார்கள்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசாங்கத்தால் ஆர்எஸ்எஸ். அமைப்பு மூன்று முறை தடை செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ்ஸோ அல்லது அதன் அரசியல் அமைப்புகளான ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி ஆகியவை மிதவாதத்துடன் இந்தியத்தன்மைக்கு மாறி விடும் என்று எதிர்பார்த்தவர்களுக்குப் பயனில்லாமல் போனதை விளக்கும் வகையிலே அந்த நடவடிக்கை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் அவ்வாறு மாறியிருந்தால், அவர்கள் இருப்பதற்கான காரணத்தையே இழந்திருப்பார்கள் என்பதே, ஆர்எஸ்எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற முக்கியமான கேள்வியிடம் மீண்டும் நம்மைக் கொண்டு சென்று விடுகிறது.

ஆர்எஸ்எஸ். பிறந்த சூழலை பிரளய் கானுங்கோ என்பவர் மிக விரிவாகப் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார். “1923 முதல் 1928 வரையான காலகட்டம் வட இந்தியாவில் ஹிந்து இனவாத மறுசீரமைப்பின் சகாப்தம் என விவரிக்கப்படுகிறது. இதில் ஆரிய சமாஜ் மிக முக்கியமான பங்கு வகித்தது. சுத்தி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆர்ய சமாஜின் செயற்பாடுகளில் மிக முக்கியமானதாக இருந்தது. சுவாமி சிரதானந்த்தின் தலைமையின் கீழ், அந்தப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது. அவரது மதமாற்ற நடவடிக்கைகள் அனைத்தும், இஸ்லாமிற்கு மதம் மாறிய ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து பாரம்பரியங்களைத் தங்களிடம் இன்னும் தக்க வைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டே இருந்தன. இவ்வாறான வகுப்புவாத மோதல்கள் நிலவி வந்த நிலையில், சங்காதன் சித்தாந்தத்திற்குப் புத்துணர்வை அளித்து ஆதரிக்கும் வகையில், நாக்பூரில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஹிந்துக்களுக்கான புதிய அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதன் நிறுவனராக டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் இருந்தார். இந்த நிகழ்வின் போது, டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் எல்.வி.பரஞ்சபே, டாக்டர் பி.பி.தல்கர், பாபாராவ் சாவர்க்கர் ஆகிய நான்கு பேரும் அங்கே இருந்தனர். இந்த அமைப்பிற்கு, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) என்று பின்னர் பெயரிடப்பட்டது” (அரசியல் மீது ஆர்.எஸ்.எஸ் கொண்ட காதல், மனோகர், பக்கங்கள் 35, 36 மற்றும் 38).

“ஹிந்துக்களை ஒரு தேசமாக முன்னிறுத்திய V.D.சாவர்க்கரின் ஹிந்துத்துவா என்ற கையெழுத்துப் பிரதி ஹெட்கேவரின் சிந்தனைகள் மீது பெரிய தாக்கத்தைக் கொண்டிருந்தது” (வால்டர் கே. ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி.டாம்லே, காவிக்குள் சகோதரத்துவம், பக்கம் 33). மூஞ்சே ஹெட்கேவாரின் குருவாக இருந்தார். ஆர்.எஸ்.எஸ் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னராக, 1925 மார்ச் மாதம் அவர் சாவர்க்கரைச் சந்தித்து மிக நீண்ட விவாதங்களை நடத்தியிருந்தார்.

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் பிரிட்டிஷாருக்கு எதிரானதாக இருந்ததில்லை

காங்கிரஸ் மற்றும் கூட்டணி இயக்கங்களும், நடவடிக்கைகளும் வன்முறையாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலானோர்  சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், ஆர்எஸ்எஸ்சை பிரிட்டிஷார் ஒருபோதும் தங்களுடைய எதிரிகளாகக் கருதியதே இல்லை.

இதற்கு மாறாக, குடிமைப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக பிரிட்டிஷாருக்கு அது தனது விசுவாசத்தைக் காட்டியது. பிரிட்டிஷாரால் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்படவில்லை என்றாலும், மூன்று முறை இந்திய அரசாங்கத்தால் அது தடை செய்யப்பட்டது. ஹெட்கேவார், கோல்வால்கர் (ஆர்எஸ்எஸ்சின் இரண்டாவது தலைவர்) இருவரும் சேர்ந்து ஹிந்து தேசத்திற்கான நற்குணங்களைக் கட்டுவதற்கான வேலைக்கு ஆதரவாக இருந்த போது, காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தில் செயல்படுவதை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தனர். “அதேபோல், தன்னுடைய வெளிப்படையான அமைப்புரீதியான கொள்கைகளின்படி, 1920 மற்றும் 1940களில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், காலனித்துவ எதிர்ப்பிற்கான சத்தியாக்கிரகங்கள் ஆகியவற்றில்  சேர ஆர்எஸ்எஸ் மறுத்தது. இவற்றோடு ரௌலட் எதிர்ப்பு கிளர்ச்சிகள், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், பம்பாயில் நடைபெற்ற கடற்படைக் கலகம் .. ஆகியவையும் அடங்கும்”. என்று லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள சேத்தன் பட் என்பவரால் மிகக் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஹிந்து தேசியவாதம் (ஆக்ஸ்போர்ட், நியூயார்க்) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் “முஸ்லீம்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வலுவாக இருக்கும் நிலையில், ஹிந்துக்கள் அனைவரும் பிளவுபட்டு பலவீனமாக இருப்பதால், போர்க்குணம் கொண்ட, ஒருங்கிணைந்த, ஆக்ரோஷமான சக்தியாக அவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற ஹெட்கேவாரின் கருத்தையே ஆர்எஸ்எஸ் தன்னுடைய தோற்றத்திற்கான காரணமாக வெளிப்படையாகக் கொண்டிருந்தது. ‘ஒத்துழையாமை இயக்க நாட்களின் போது இருந்த எழுச்சி இப்போது இல்லை. அந்த இயக்கத்தால் விளைந்த பல்வேறு துன்பங்கள் இப்போது கடந்த கால நிகழ்வுகளாகி விட்டன. பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மை, மனக்கசப்பு, தனிப்பட்ட மற்றும் சாதிப் போட்டிகள், பிராமணர் – பிராமணரல்லாதோர் எனும் சர்ச்சைகள் தலை தூக்கி உள்ளன.  இவ்வாறான உள்சச்சரவுகள், ஒழுங்கற்றதன்மை ஆகியவை இல்லாமல் எந்த ஒரு அமைப்போ அல்லது நிறுவனமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஒத்துழையாமை என்ற பாலைக் குடித்த முஸ்லீம் மதவெறி எனும் பாம்பு, அதன் நச்சுப்பற்களை விரித்து நாடெங்கிலும் வன்முறைக் கலவரங்கள் என்ற விஷத்தைப் பரப்பி வருகிறது” என்பதாக 1920களின் தொடக்கத்தில் நிலவிய அரசியல் நிலைமை பற்றிய ஹெட்கேவாரின் விளக்கம் இருந்தது.

சேத்தன் பட் மேலும் கூறும் போது, “ஹிந்துக்களின் மத்தியில் ஒற்றுமை மற்றும் சுய மரியாதை இல்லாமல் இருப்பதே, இந்த ‘சுய-மறதி’ கொண்ட இருண்ட இரவில் ஹிந்து சமுதாயத்தை எதிர்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பதாக ஹெட்கேவார் நம்பினார்” (பக்கங்கள் 115 மற்றும் 117). மிகச் சிறந்த சமூகத்திடம் இத்தகைய சிந்தனைகள் தாழ்வு மனப்பான்மையைப் பரவவிட்டன. இன்றளவிலும் இந்தப் பிரச்சாரம் ஆர்எஸ்எஸ்சால் செய்யப்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ் தன்னுடைய பாதையில் சரியாகப் பயணிக்க ஆரம்பித்தது. ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாற்றில்  (சி.பி.பிஸ்லிகார், சங்கவர்கிஷ் கே பீஜ் / டாக்டர் கேசவராவ் ஹெட்கேவார்),  “சங்கத்தை நிறுவிய பின்னர், டாக்டர் சாகேப் தன்னுடைய உரையில் ஹிந்து அமைப்பைப் பற்றி மட்டுமே பேசி வந்தார். அரசாங்கத்தின் மீது அவருடைய நேரடிக் கருத்துக்கள் எதுவும் இருந்ததில்லை” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது ஹிந்தியில் எழுதப்பட்ட இந்த அதிகாரப்பூர்வமான வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த சில பகுதிகள் டாக்டர் சம்சுல் இஸ்லாம் எழுதிய ஹிந்து தேசியவாதமும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கமும் என்ற புத்தகத்திலும் (மீடியா ஹவுஸ், டெல்லி,2015), ஆர் எஸ் எஸ் சை அறிந்து கொள்வோம் என்ற சிறு வெளியீட்டிலும் (பரோஸ் மீடியா, ஜமியா நகர், புது டெல்லி, 2017) குறிப்பிடப்பட்டுள்ளன.

மற்றொரு வாழ்க்கை வரலாற்றில், “இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் மீது அக்கறை கொண்டு காந்திஜி தொடர்ந்து பணியாற்றினார் என்பது தெளிவு. … ஆனால் டாக்டர்ஜி அந்த நடவடிக்கையில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தார். உண்மையில் அவர் ‘இந்து – முஸ்லீம் ஒற்றுமை’ என்ற அந்தப் புதிய கோஷத்தை விரும்பவில்லை. (சம்சுல் இஸ்லாம், ஹிந்து தேசியவாதமும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கமும், பக்கம் 207) என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டிஷாருக்கு எதிராக, முஸ்லீம்களுடன் இணக்கமாக இருந்து எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் செய்வதில்லை, நேரடியாக பிரிட்டிஷாருடன் கலந்து பேசி, ஆட்சியாளர்களை நல்லதொரு மனநிலையில் வைத்திருந்து, அதிகாரத்தைப் பாதுகாப்பாக மாற்றிக் கொண்டு, ஹிந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவது என்பதாகவே ஆர்எஸ்எஸ்சின் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக இருந்தன.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக இருந்த மோடி 2014இல் தான் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு, தாங்கள் ஏற்கனவே இழந்திருந்த 1947 முதல் 2014 வரையிலான காலகட்டத்தைச் சரி செய்வதற்கு முயன்று, படிப்படியாக தாழ்நிலைக்கு நகர்ந்து சென்றார். எனவேதான் அவரது ஆதரவாளர்களின் தவறான செயல்களின் மீது அவர் தனது நாவன்மை மிக்க மௌனத்தைக் காட்டுகிறார். ஹார்வி வெய்ன்ஸ்டீனின் நண்பர்களான பாரக் ஒபாமா, மிட்சல் ஒபாமா, ஹில்லாரி கிளின்டன் ஆகியோர். அவர் செய்த குற்றங்களில் இருந்து தாங்கள் விலகி நின்று அவரைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்தனர். ஆனால் தன்னுடைய ஆதரவாளர்களிடம் மோடியால் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ்சும், அவரும் ஒருவருக்கொருவர் மிக மோசமாகத் தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள். தங்களைத் தாங்களே மரணப்பிடி கொண்டு இறுகத் தழுவிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் தற்போது எப்படி இருக்கிறது என்பதை, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் முடிவு செய்திருக்கிறது. “அன்புள்ள தாய்நாடே, சாஸ்வதமாக நான் உன்னை வணங்குகிறேன். / ஹிந்துக்களின் நிலமான நீ எனக்கு ஆறுதல் அளித்தாய் / நல்லவற்றை உருவாக்குகின்ற புனிதமான நிலமே, இந்த உடலை நான் உனக்கு அர்ப்பணிக்கிறேன் / மீண்டும் மீண்டும் உன்னை நான் வணங்குகிறேன் / சர்வ வல்லமையுள்ள கடவுளே, ஹிந்து ராஷ்ட்ரத்தின் பிள்ளைகளாகிய நாங்கள் மரியாதையுடன் உன்னை வணங்குகிறோம்.” என்று அவர்களின் ஹிந்தி – மராத்திய பிரார்த்தனைக்குப் பதிலாக 1939இல் அறிமுகப்படுத்தப்பட்ட சமஸ்கிருதப் பிரார்த்தனையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “அனைத்துச் சக்தியும் வாய்ந்த கடவுள் மற்றும் எனது முன்னோர்கள் முன்பாக நான் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய புனித ஹிந்து மதம், ஹிந்து சமுதாயம், ஹிந்து கலாச்சாரம் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் பாரத்வர்ஷின் பெருமையை  நிறைவேற்றுவதற்காக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் உறுப்பினராக நான் சேர்ந்திருக்கிறேன். சங்கத்தின் வேலைகளை நேர்மையுடனும், அக்கறையுடனும் என் இதயம், ஆன்மாவோடு உள்ளார்ந்து செய்வேன், என் வாழ்நாள் முழுவதும் இந்த உறுதிமொழியை நான் கடைப்பிடிப்பேன். பாரத் மாதா கி ஜே” என்பது ஆர்எஸ்எஸ்சில் ஒவ்வொரு உறுப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி (டி.ஆர்.கோயல், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம், ராதாகிருஷ்ண பிரகாசன், தர்யகஞ்ச், புது டெல்லி, பக்கங்கள் 247-249). அவர்களுடைய லத்தியின் பயன்பாடு பற்றிய வழிமுறைகள் “குழு பிரார்த்தனை”யின் பகுதியாக உள்ளன (ஆண்டர்சன் மற்றும் டாம்லே, பக்கம் 35)

தலைவர் வழிபாடு

1925 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை உருவாக்கிய ஐந்து பேரும், புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கான பெயரைப் பற்றி எண்ணியவர்களாக இருக்கவில்லை. 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று ராம நவமி தினத்தில் இந்தப் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1926 டிசம்பர் 19 அன்று தலைமை அமைப்பாளராக (சாலக்) ஹெட்கேவார் முறையாக நியமிக்கப்பட்டார். பேராசை தணியாமல், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வாதிகாரியாக அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

“1929நவம்பர் 9-10இல் சங்சாலக்குகளுடன் நடந்த ஒரு கூட்டத்தில், தலைவராக மீண்டும் ஒருமுறை தன்னை அறிவித்துக் கொண்ட ஹெட்கேவார், ‘உள்ளுக்குள் இருக்க வேண்டிய ஒழுங்குமுறையின் கண்ணோட்டத்தில் பார்த்தால், திட்டங்களுக்கான மூளையாக இருந்து செயல்படுகின்ற தலைவர் ஒருவரின் கீழ் அமைப்பு செயல்பட வேண்டும்.’  என்றார். ஹெட்கேவாரைப் பொறுத்து, இதுவே அமைப்பின் ஒரே கொள்கையாக மாறியது. 1933ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அந்தச் சுற்றறிக்கையில் ”சர்சங்சாலக்கின் கட்டளைகளுக்கு ஸ்வயம் சேவக்குகள் முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும். வால் உடலை அசைக்கும் நிலைமைக்கு சங்கம் சென்றடையக் கூடாது. இதுவே சங்கத்தின் வெற்றிக்கான ரகசியம்” என்று ஹெட்கேவாரே எழுதியிருந்தார். இவ்வாறு ஒரு தலைவரின் கீழ்ப்படிதல் என்பது விரைவில் தலைவர் வழிபாடாக மாறியது. உண்மையில், 1929 நவம்பர் 10 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுமையான அமைப்புக் கூட்டத்தில், ஹெட்கேவருக்கு ஸ்வயம் சேவக்குகளால் ராணுவ பாணியிலான பிரணாம் என்கிற வணக்கம் செலுத்தப்பட்டது முதல் அது நிறுவனமயப்படுத்தப்பட்டது” (சம்சுல் இஸ்லாம், பக்கம் 213). இந்தப் பாசிச பாரம்பரியம் இன்றளவிலும் தொடர்ந்து வருகிறது.

பிரிட்டிஷாருடனான ஒத்துழைப்பு

காங்கிரஸைக் கண்டனம் செய்ய வேண்டும், முஸ்லீம்களைத் தோலுரிக்க வேண்டும் என்ற சங் பரிவாரின் (அதாவது, ஹிந்து மகாசபா, ஆர்எஸ்எஸ்) வெளிப்படையான மூன்றாவது தேர்வாக பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பது எனபது இருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்வதற்கான எந்தவொரு காரணத்தையும் பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்தித் தந்து விடக் கூடாது என்று கோல்வால்கர் உறுதியாக நம்பினார். அனைத்து அதிகாரப்பூர்வமற்ற  அமைப்புகளிலும் ராணுவப் பயிற்சி மற்றும் சீருடைகளைப் பயன்படுத்துவதை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தபோது, எவ்வித எதிர்ப்புமின்றி ​​ஆர்எஸ்எஸ் அதனை ஏற்றுக் கொண்டது. 1943 ஏப்ரல் 29 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு மூடப்படுவதாக அறிவிப்பு ஒன்றினை மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கோல்வால்கர் அனுப்பி வைத்தார். ஆர்எஸ்எஸ் மீதான தடை வருவதற்கான சாத்தியக்கூற்றைப் பற்றிய அவரது அச்சங்களை வெளிப்படுத்திய அந்த சுற்றறிக்கையில்,

அரசாங்கத்தின் முந்தைய ஆணையில் இருந்த ராணுவப் பயிற்சி, சீருடை அணிவது போன்ற நடைமுறைகளை நாம் ஏற்கனவே நிறுத்தி விட்டோம் … சட்டத்தை மதிக்கின்ற குடிமக்களைப் போல, சட்டத்தின் எல்லைக்குள்ளேயே நமது செயல்பாடுகளை வைத்துக் கொள்வதற்காக… சூழ்நிலைகள் மிக விரைவில் மாறும் என்ற நம்பிக்கையுடன், நம்முடைய பயிற்சியின் ஒரு பகுதியை மட்டுமே நிறுத்தி இருந்தோம். ஆனால் இப்போது, அந்த நேரத்திற்காக காத்திருக்காமல், அந்தப் பயிற்சிகளை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, ​​அந்த ராணுவப் பிரிவை முற்றிலும் நீக்குவது என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

“கோல்வால்கர் வழக்கமான அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற புரட்சியாளர் அல்ல. பிரிட்டிஷார் இதனைப் புரிந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் செயற்பாடுகளைப் பற்றி 1943ஆம் ஆண்டு உள்துறையால் தயாரிக்கப்பட்டதொரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், ’சட்டம் ஒழுங்கிற்கு உடனடி அச்சுறுத்தலாக ஆர்எஸ்எஸ் இருப்பதாக வாதிடுவது மிகக் கடினம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஏற்பட்ட வன்முறைகள் குறித்து’சங்கம் சட்டத்திற்கு அச்சப்பட்டே நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 1942 ஆகஸ்டில் ஏற்பட்ட கலவரத்தில் அது பங்கெடுத்துக் கொள்ளாது ஒதுங்கியிருந்தது…’ என்று பம்பாய் உள்துறை தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தது” (ஆண்டர்சன், டாம்லே, பக்கம் 44).

சாவர்க்கர் பல தடவை கேட்டுக் கொண்ட இழிவான மன்னிப்புக்கள் நன்கு அறியப்பட்டவையாக இருக்கின்றன.

  1. 1911 ஜூலை 4 அன்று அந்தமான் தீவுகளுக்குக் கொண்டு வரப்பட்ட அவர், அந்த ஆண்டு முடிவதற்கு முன்பாகவே மன்னிப்புக் கோரி கருணை மனுவைச் சமர்ப்பித்தார்.
  2. 1913இல், அரசாங்கம் விரும்பியவாறு எந்தவொரு வேலையையும் செய்வதற்காகத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதாக அவர் எழுதினார். 1914 மற்றும் 1917ஆம் ஆண்டுகளிலும் இதையே மீண்டும் செய்தார்.
  3. 1920 மார்ச் 30 அன்று, அவர் மற்றுமொரு கருணை மனுவைச் சமர்ப்பித்தார். (ஃபிரண்ட்லைன் ஏப்ரல் 8, 2005).
  4. ஐந்து ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் பகிரங்கமாக அல்லது தனிப்பட்ட முறையில் அவர் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன். 1924 ஜனவரி 6 அன்று அவர் விடுவிக்கப்பட்டார், 1937 ஆம் ஆண்டு வரை அது நீட்டிக்கப்பட்டு, உள்துறை அமைச்சராக கே.எம்.முன்ஷி இருந்த போது அவர் விடுதலை செய்யப்பட்டார்.
  5. 1948 பிப்ரவரி 22 அன்று காந்தியின் படுகொலை தொடர்பாக தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அரசியலைக் கைவிட்டு விடுவதாக ஓர் உறுதிமொழியை பம்பாய் காவல்துறை ஆணையரிடம் எழுதிக் கொடுத்தார். .
  6. 1950 ஜூலை 13 அன்று இனிமேல் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்று பம்பாய் உயர்நீதி மன்றத்திற்கு மற்றொரு முறை உறுதிமொழியை எழுதிக் கொடுத்தார்.

பரிவாரின் மிகப் பெரிய இரண்டு தலைவர்களின் உண்மையான நிறங்களை இரண்டாம் உலகப் போர் அம்பலப்படுத்தியது. 1939 அக்டோபர் 9 அன்று வைஸ்ராய் லின்லித்கோவை பம்பாயில் சந்தித்த சாவர்க்கர், “மாட்சிமை வாய்ந்த அரசாங்கம் இப்போது ஹிந்துக்கள் பக்கம் திரும்பி அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக அவர் [சாவர்க்கர்] கூறினார்.

கடந்த காலத்தில் நாங்களும், ஹிந்துக்களும் ஒருவரையொருவர் சிரமப்படுத்தியிருந்தாலும்கூட, அவை பிரிட்டனுக்கும் பிரெஞ்சு தேசத்திற்கும், சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்ற ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவுகளைப் போன்றே இருந்தன. எங்களுடைய கருத்துக்கள் இப்போது ஒரே மாதிரியாக இருப்பதால், நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இப்போது மிக நிதானமான மனிதராக இருந்தபோதிலும், கடந்த காலத்தில் புரட்சிகரக் கட்சியோடு ஒத்துழைப்புடன் இருந்த ஒருவரைப் பற்றி நான் கூடுமானவரை அறிந்தவனாகவே இருக்கிறேன் (நான் அவ்வாறு இருந்ததை உறுதிப்படுத்துகிறேன்). ஆனால் இப்போது, ஹிந்து தத்துவங்களும், பிரிட்டனும் நண்பர்களாக இருப்பதற்கு, நம்முடைய கருத்துக்கள் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இனிமேல் நமக்கிடையே பழைய முரண்பாடுகள் தேவைப்படாது “(மார்சியா கசோலரி, ஸ்வஸ்திகாவின் நிழல், பக்கம் 172) என்று தன்னுடைய கருத்துக்களை மிகச் சரியாகப் பதிவு செய்தார்.

எஸ்.பி.முகர்ஜியின் கடிதம்

மகாசபாவின் முன்னாள் தலைவரும், ஆர்எஸ்எஸ் உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஜனசங்கத்தை நிறுவியவருமான சியாமா பிரசாத் முகர்ஜிக்கே அடுத்த பரிசு செல்கிறது. 1940 மார்ச் மாதத்தில் லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் தீர்மானத்தைக் கொண்டு வந்த பஸ்லுல் ஹக் என்பவரின் அமைச்சரவையில் 1941 டிசம்பரில் முகர்ஜி அமைச்சராக இருந்தார். காங்கிரஸின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, வங்க ஆளுநராக இருந்த சர் ஜான் ஹெர்பெர்ட் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் “காங்கிரஸால் நடத்தப்பட உள்ள மிகப் பெரிய  இயக்கத்தின் விளைவாக மாகாணத்தில் உருவாகப் போகும் நிலைமையை இப்போது நான் குறிப்பிடுகிறேன். போரின் போது வெகுஜன உணர்வுகளைத் தூண்டி விட்டு, அதன் விளைவாக, நாட்டிற்குள் குழப்பங்களையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தத் திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசாங்கம் அடக்கி வைக்க வேண்டும்.

இங்கிலாந்தின் மீது இந்தியாவின் அணுகுமுறையைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இடையேயான போராட்டம், அப்படி ஏதாவது இருந்தால், இந்த சூழ்நிலையில் அது நடக்கக் கூடாது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்காக தற்போதைய போர் நடைபெறவில்லை. ஏகாதிபத்தியத்தின் பழைய சிந்தனைகள் நிலத்தடியில் புதைக்கப்பட வேண்டும், தற்போதைய போரின் விளைவு என்னவாக இருந்தாலும் அவை புதுப்பிக்கப்படக் கூடாது. வங்கத்தில் இந்த இயக்கத்தை எவ்வாறு அடக்குவது என்பதுதான் கேள்வி. காங்கிரஸ் எந்தவிதமான முயற்சிகளை மேற்கொண்டாலும்கூட, அந்த இயக்கம் மாகாணத்தில் வேரூன்ற முடியாத அளவிற்கு மாகாணத்தின் நிர்வாகம் செயல்பட வேண்டும். சுதந்திரம் அடைவதற்காக காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இயக்கம் ஏற்கனவே மக்களுடைய பிரதிநிதிகளுக்கு சொந்தமானதாக இருக்கிறது என்பதை பொதுமக்களுக்குச் சொல்லுவது நமக்கு, குறிப்பாக அமைச்சர்களுக்கு சாத்தியமானதாக இருக்கிறது. சில இடங்களில், நெருக்கடியான அவசர காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம். இந்தியர்கள் பிரிட்டிஷாரை நிச்சயமாக நம்ப வேண்டும்” (எஸ்.பி.முகர்ஜி, டயரியில் இருந்து சில பக்கங்கள், பக்கங்கள் 179 மற்றும் 183). மகாசபாவின் பிரதிநிதியாக, வைஸ்ராயின் செயற்குழுவில் சர் ஜுவாலா பிரசாத் ஸ்ரீவஸ்தவா என்பவர் இருந்தார்.

ஒருசார்பாக பங்கிம் சந்திரர்

பிரிட்டிஷாருடனான ஒத்துழைப்பு என்பது தந்திரோபாய அடிப்படையில் கருத்தியல் ஒன்றைக் கொண்டதாக இருந்தது. “வரலாறின் மீது காதலர்களாக இருந்த பங்கிம் சட்டர்ஜி, ரமேஷ் சந்திர தத் போன்றவர்கள் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராக எழுந்த ஹிந்து எழுச்சியைப் பெருமைப்படுத்தியதோடு, முஸ்லீம்களை மிக மோசமான வகையிலும் சித்தரித்துள்ளனர். சட்டர்ஜி மிகக் கடுமையான நேரடி முஸ்லீம் எதிர்ப்புணர்வைக் கொண்டவராக இருந்தார். இத்தகைய போற்றுதல்களை வாசிக்கும் ஆர்வமுள்ள வாசகர்களாக இருந்த நாங்கள் அவர்களது சிந்தனைகளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டோம்” என்று அறியப்படாத இந்தியனின் சுயசரிதை என்ற தன்னுடைய புத்தகத்தில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட காலத்தில் நிலவிய சூழலை நிராத் சி. சௌத்ரி விவரிக்கிறார்.

பங்கிம் சந்திரர் தேசபக்தியை மதமாகவும், மதத்தை தேசபக்தியாகவும் மாற்றினார்  என்று  வரலாற்றாளர் ஆர்.சி.மஜும்தார் பாண்டே கூறுகிறார். வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றிருந்த ஆனந்த மடம் என்ற நாவல் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வைக் கொண்டதல்ல. அதன் இறுதி அத்தியாயத்தில் சன்னியாசிகளின் தலைவரான சத்யானந்தாவிடம் தெய்வீகத்தன்மை கொண்ட ஒருவர் சண்டை போடுவதை நிறுத்துமாறு கூறுவதை நாம் காண்கிறோம். “உங்களுடைய பணி நிறைவேறி விட்டது. முஸ்லீம்களின் அதிகாரம் அழிக்கப்பட்டு விட்டது. இனிமேல் நீங்கள் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. தேவையற்ற கொலைகளால் எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை” என்று அதற்குப் பின்னால் வருகின்ற உரையாடல் மிகவும் சுவாரசியமானது:

முஸ்லீம்களுக்கு எதிரான குறிப்புகள் அந்த நாவல் எங்கும் நிறைந்திருக்கின்றன. கோவில் வாசலில் கத்தியுடன் நின்று கொண்டிருக்கும் ஜீவானந்தா, காளியின் குழந்தைகளை ஊக்குவிக்கிற வகையில், “முஸ்லீம் ஆட்சி என்ற இந்த பறவைக் கூட்டைக் கலைப்பதற்கும், இந்தத் துரோகிகளின் நகரைச் சின்னாபின்னமாக்கி ஆற்றில் வீசுவதற்கும், இந்தப் பன்றிக்கொட்டிலைச் சாம்பலாக்கி இந்த பூமித்தாயை தீயசக்திகளிடமிருந்து விடுவிக்கவும் எண்ணம் கொண்டவர்களாகவே நாம் இருந்து வந்தோம். நண்பர்களே, அந்த நாள் இதோ வந்துவிட்டது” என்று பேசியதாக அந்த நாவலில் வருகிறது.

இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடல் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது.  தெய்வமாகக் கருதப்படுகின்ற நாட்டிற்கு மதரீதியான மரியாதை தருகின்ற வகையான வழிபாடாகவே அந்தப் பாடல் இருப்பதாக மஜூம்தார் குறிப்பிடுகிறார்.

வலிமை மற்றும் பெருமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் காளி என்ற தெய்வமாக தாய்நாட்டை உருவகித்துப் பாடியதாகவே அந்தப் பாடல் இருக்கிறது. இவ்வாறு அந்தப் பாடலிலேயே உள்ளது. சூழல் அந்தப் பாடலை மிக மோசமானதாக ஆக்குகின்றது. “வங்க நிலம், இன்னும் விரிவுபடுத்தி இந்தியா முழுமையும், ஹிந்து தெய்வத்தின் பெண் அம்சத்துடன் அடையாளம் காணப்பட்டது, அதன் விளைவாக தெய்வீகத் தாய்நாடு என்ற கருத்தாக்கம் உருவானது” (மதச்சார்பற்ற அரசாக இந்தியா, டொனால்ட் யூஜின் ஸ்மித், 1963, பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்). அவ்வாறான ஒரு பாடல் எப்படி மதச்சார்பற்றதாக இருக்க முடியும்?

இந்தப் பல்லவியையே லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட பலரும் எடுத்துக் கொண்டனர். “ஹிந்து சங்காதன், ஹிந்து ராஜ்யம். முஸ்லிம்களைச் சுத்தி செய்வது, ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் எல்லைகளின் மீது வெற்றி காண்பது, அதனைச் சுத்தி செய்வது ஆகிய நான்கு தூண்களிலேயே ஹிந்து இனம், ஹிந்துஸ்தான் மற்றும் பஞ்சாபின் எதிர்காலம் இருப்பதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று 1925ஆம்  ஆண்டில் ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்ட போது, லாலா ஹர்டியால் என்பவர் லாகூரில் இருந்து வெளியான பிரதாப் என்ற பத்திரிகையில் இவ்வாறு எழுதினார். சாவர்க்கர்,  ஹெட்கேவார் போன்றவர்கள் சுவீகரித்துக் கொண்ட இந்த மரபுரிமைகளை அவர்களது வாரிசுகளான மோடி மற்றும் பிறரும் இப்போது சுமந்து கொண்டு முன்னேறுகின்றனர்.

அடக்குமுறைக்குள்ளான முஸ்லீம்கள் 

1857 சிப்பாய்க் கலகத்தைப் பற்றி எழுதிய அசோக மேத்தா, “அந்தக் கலகம் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​அதில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். முஸ்லீம்களின் மீதே அந்த அடக்குமுறையின் கரம் அதிகமாக நீண்டது. அச்சுறுத்தலின் முத்திரை அவர்கள் மீது குத்தப்பட்டது. (1857, மிகப் பெரிய புரட்சி). அசோக மேத்தா எழுதியிருப்பதைப் போல, முஸ்லீம்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளானவர்களாகவே இருந்தனர்.

பிரிட்டிஷார் அவர்களை மிகுந்த விரோதத்துடன் நடத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தினர் என்று வங்காள குடிமைப் பணியில் இருந்த டபிள்யு.டபிள்யு. ஹண்டர் தன்னுடைய இந்திய முசல்மான்கள் என்ற புத்தகத்தில் (1871) எழுதியிருக்கிறார். அவரின் இந்த வரிகள் அப்போதைய நிலவரத்தை விளக்குவதாக இருக்கின்றன. “முதலாவதாக  ராணுவம் அவர்களுக்கு முழுமையாக மூடப்பட்டு விட்டது. முகம்மதியராகப் பிறந்தவர் எவருமே எங்களுடைய படைப் பிரிவிற்குள் நுழைய முடியாது; … பொதுச்சேவைகளில் முசல்மான்களின் பங்கு முன்பிருந்ததை விட, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே செல்கிறது. சுமை தூக்குபவர், தகவல் கொண்டு செல்பவர், பேனாக்களில் மை நிரப்புபவர், பேனாக்களைச் சரி செய்பவர் என்ற வேலைகளைத் தவிர்த்து,

அதற்கு மேலான பதவிகளில் கல்கத்தாவில் உள்ள அரசு அலுவலகமொன்றில் முகம்மதியன் ஒருவர் இப்போது இருக்க முடியாது. வங்கத்தில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் இருவர் ஹிந்துக்கள், ஆனால் முசல்மான்கள் யாரும் இல்லை. முன்பு நீதித்துறை முழுவதுமாக ஏகபோகத்தை எடுத்துக் கொண்ட ஆங்கிலோ-இந்தியர்களுக்கும்,  தற்போது இந்துக்களுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அந்த இனத்திலிருந்தே எடுத்துக் கொள்வது என்ற கருத்து உண்மையில் பொருந்துவதாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், முகம்மதியர்கள் இப்போது மிகவும் குறைக்கப்பட்டு விட்டனர், அரசாங்க வேலைவாய்ப்புக்கு அவர்கள் தகுதி பெற்றிருந்த போதும், அரசாங்க அறிவிப்புகளிலிருந்து அவர்கள் மிகுந்த கவனத்தோடு அகற்றப்படுகிறார்கள். அவர்களது இந்த மோசமான நிலைமை குறித்து உதவிட யாரும் முன்வரவில்லை. உயர் அதிகாரிகளோ அவர்களின் இருப்பைக்கூட ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. முஸ்லீம்கள் புத்திசாலிகளாக இருந்திருந்தால், அவர்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு, தங்கள் விதியை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்”

முஸ்லீம்கள் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பதற்கான ஊக்கமோ, விருப்பமோ கொண்டிருக்கவில்லை. முஸ்லீம்களை அரசியலை விட்டு விலகி கல்வி பயிலச் செல்லுமாறு சர் சையத் அகமத் கான் அறிவுறுத்தினார். பத்ருதீன் தியாப்ஜி, ஜின்னா போன்றவர்கள் காங்கிரஸில் சேர்ந்து சுதந்திர விடுதலை இயக்கத்தைச் செழுமைப்படுத்தினர். 1921ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான இந்திய சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முதன்முதலாக, பெருங்கவிஞரும், திலகரின் அபிமானியுமான மௌலானா ஹஸ்ரத் மொஹானி என்பவர் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தில், “சட்டப்பூர்வமான, அமைதியான வழிகளில் இந்திய மக்களைக் கொண்டு சுயராஜ்யத்தை அல்லது அன்னியத் தளைகளில் இருந்து முழுமையான சுதந்திரத்தை அடைவதே இந்திய தேசிய காங்கிரசின் நோக்கமாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பொறுப்பற்ற தன்மையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்று அதனை ஆதரித்தவர்கள் மீது குற்றத்தைச் சுமத்திய காந்தி அந்தத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார். அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. டாக்டர் கே.சி.கண்டாவின் தொகுப்புகளில், சுதந்திரம் குறித்த கவிதைகளை முஸ்லீம்கள் அதிக அளவில் எழுதியுள்ளனர். அந்தத் தொகுப்பில், 1927ஆம் ஆண்டு ககோரி ரயில் கொள்ளை வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஷ்ஃபகுல்லா கானின் கவிதை ஒன்றும் இடம் பெற்றிருந்தது. டாக்டர் சம்சுல் இஸ்லாம் இந்தியப் பிரிவினைக்கு எதிராக இருந்த முஸ்லீம்கள் என்ற தன்னுடைய புத்தகத்தில் இதனை ஆவணப்படுத்தியுள்ளார். (பரோஸ் மீடியா, ஜமியா நகர், புது டெல்லி, பக்கங்கள் 249, ரூ.80). புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ஹர்பன்ஸ் மாக்கியாவின் முன்னுரை இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

முஸ்லீம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்தனர். ஆனால் சங் பரிவார அமைப்பினரோ பிரிட்டிஷாரோடு ஒத்துப் போனார்கள். இவர்களில் யார் தேசத் துரோகிகள்? ஆவணங்கள் உண்மையை வெளிப்படுத்துகின்றன. இந்திய தேசியவாதத்தைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்வதை பரிவார் அமைப்புகள் இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய தேசியவாதத்தை வெளியேற்றி விட்டு ஹிந்து தேசியவாதத்தைப் பரவலாக்குவதற்கு, அதன் பிரச்சாரக்கான நரேந்திர மோடி அமெரிக்க ஆதரவை அனுதினமும் வேண்டிக் கொண்டு நிற்கிறார். அவர்கள் பிரிட்டிஷாரை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

(ஃப்ரண்ட்லைன், 2017 நவம்பர் 10)

http://www.frontline.in/the-nation/betrayal-of-indian-nationalism/article9921835.ece

தமிழாக்கம் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: