அரியலூர்: நீதிமன்ற உத்தரவையும் மீறி விபத்து இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் விவசாயி, ராஜேந்திரன். இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி, பாப்பாக்குடியில் தனது  வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துகுறித்த வழக்கில், ராஜேந்திரனின் மனைவி தனவள்ளிக்குக் கடந்த 5.11.16 அன்று 6 லட்சத்து 78ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க அரியலூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. இதனால், ராஜேந்திரனின் மனைவி தனவள்ளி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனவள்ளிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் சேர்த்து 7லட்சத்து 66 ஆயிரத்து 381ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் மீறி ஒருவருடத்திற்கும் மேலாக அரசுப் போக்குவரத்து நிர்வாகம்  தனவள்ளிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்த அரசுப் பேருந்தை ஜப்திசெய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.