சிம்லா;
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (நவ.9) நடைபெறுகிறது.பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தின் புதிய சட்டமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. நவ.9 அன்று வாக்குப்பதிவு என்று அறிவிப்பு வெளியானதும் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நவ.7 தேதியோடு பிரச்சாரம் நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என்று 337 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் 338 என்றிருந்த எண்ணிக்கை 337 ஆகக் குறைந்து விட்டது. தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 25 ஆயிரத்து 941 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாறி, மாறி மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அனைத்து 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இமாச்சலப் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கையும் அதோடு இணைந்தே செய்யப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளுக்காக இமாச்சல வாக்காளர்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும்.

முக்கிய வேட்பாளர்கள்
காங்கிரசின் தற்போதைய முதல்வர் வீரபத்ர சிங், பாஜகவின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங்கா, சிம்லாவின் முன்னாள் மேயர் சஞ்சய் சவுகான் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களுக்காக பல கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தலைவர்கள் சுபாஷினி அலி, முகமது சலீம் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சார உத்திகள்
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் பெரும் கூட்டங்களை நடத்தி தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டன. பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளும் பெரும் செலவு செய்தன. மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, தெருமுனைக் கூட்டங்களையும், வீதி நாடகங்களையும் நடத்தி மக்களிடம் வாக்குகளை சேகரித்தது. சிம்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ராகேஷ் சிங்கா போட்டியிடும் தியோக் தொகுதியில் பாஜகவுடனான நேரடிப் போட்டியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
12 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்டுள்ளன. 3 லட்சம் லிட்டம் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களால் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.

பாஜகவில் சுக்ராம் குடும்பம்
பெரும் ஊழலில் ஈடுபட்டு, படுக்கையில் கத்தை கத்தையாகப் பணம் வைத்திருந்து மாட்டிக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மற்றும் அவரது மகன்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இத்தனைக்கும் அவரது மகன் அனில் சர்மா தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு கூட மாநில அமைச்சராக இருந்து வந்தார். கடைசி நேரத்தில் கட்சி மாறி பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சுக்ராம் மற்றும் அவரது குடும்பத்தின் ஊழல் பற்றிக் கேட்டதற்கு, கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் என்று பாஜக தலைவர்கள் சமாளித்திருக்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: