சிம்லா;
மாற்று அரசியலுக்கான வாய்ப்புகளை இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தெளிவுபடுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார். சிம்லா மார்க்கெட் அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது, தலைவர்களை மையப்படுத்தி நடக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இமாச்சல் பிரதேசத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் காங்கிரசும் பாஜகவும் ஒரே விதமான கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. மாநில மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்க சிபிஎம் போட்டியிடுகிறது.

மத்தியில் மூன்றரை ஆண்டுகளாக நடக்கும் மோடியின் அரசு மக்களின் வாழக்கையை மேம்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே மோடி அரசு முன்னிறுத்துகிறது. செல்லக்காசு நடவடிக்கை மூலம் கறுப்புப்பணம், கள்ளப்பணம் முழுவதும் வெள்ளைப்பணமாக மாற்றப்பட்டன.வங்கிகளுக்கு வந்துள்ள அந்த பணத்திற்கு ஆண்டுதோறும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தீவிரவாதமும், ஊழலும் வளர்ந்துள்ளன.

ஊழலுக்கு இடமளிக்க முடியாது என்று மோடி கூறி வருகிறார்.பிர்லா-சஹாரா டயரி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது. பனாமா பட்டியலில் பெயர் வந்ததைத் தொடர்ந்து நவாஷ் செரீப் பாகிஸ்தான் பிரமர் பதவியை ராஜினாமா செய்தார். அதை பின்பற்றி மோடியும் பதவியை விட்டு விலக வேண்டும். இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஊழலிலிருந்தும், மோசமான ஆட்சியிலிருந்தும் மாநில மக்களை பாதுகாக்க வேண்டும்.இதற்கான மாற்று கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது. இந்த மாநிலத்தில் மக்கள் அளிக்கும் வாக்கு நாட்டின் மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும். செங்கொடியின் உண்மையான பிரதிநிதிகளை சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று யெச்சூரி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

இப்பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மேக் இன் இந்தியா என்று கொட்டி முழங்கும் பாஜக அரசு குஜராத்தில் அமைக்க உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையின் தலையைக் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்தார்கள் என்று குறிப்பிட்டார்.இப்பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் சஞ்சாய் சவுகான், டாக்டர் குல்தீப்சிங் தல்வார் மற்றும் கட்சி தலைவர்கள் பேசினர். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக பேரணியும், தெரு நாடகங்களும் நடைபெற்றன.

 

Leave a Reply

You must be logged in to post a comment.