கரூர்;
மதவாத, சாதியவாத அமைப்புகள் தலைதூக்கவோ, காலூன்றவோ தமிழகம் இடம் தராது என்று கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.மத்திய பாஜக -மாநில அதிமுக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தலைதூக்க, காலூன்ற நினைக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் மதவாத சக்திகளின் அடாவடித்தனத்தை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தனி நபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அம்பலப்படுத்தி கண்டிக்கும் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நடத்தவில்லை. முழுமையாக பாஜகதான் இயக்குகிறது. அதிமுக அரசு சுதந்திரமாக, சுயாட்சியாக இயங்க முடியாத நிலை உள்ளது. காவல்துறை அதிமுக கட்டுப்பாட்டில் உள்ளதா, இல்லை பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா என கேள்வி எழுகிறது.

கரூரில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி நடந்த பாஜக நிகழ்ச்சிக்கு அனைத்து தலைவர்களும் வந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தனர். பாஜக நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபம் வழியாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து, வாகனத்தில் ஏற்றிய நிலையில் அவர்களை பாஜகவினர் தாக்குவதை காவல்துறை வேடிக்கை பார்த்தது. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த 2 நாட்களில் மயிலாடுதுறையிலும் இதேபோல் ஒரு சம்பவம். யார் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கையிலே இப்படியென்றால் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனநாயக சக்திகளோடு இணைந்து எதிர்க்கிறோம்.

இடதுசாரி, நாத்திக சிந்தனையாளர்களோடு சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் செயல்படுவதால் தனிப்பட்ட முறையில் காட்டமாக, அநாகரீகமாக விமர்சிப்பதை கண்டிக்கிறோம்.
தமிழிசை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தன்னை பற்றி யாரும் பேசவில்லை என்ற ஏக்கத்தில் எச்.ராஜா விடுதலை சிறுத்தைகள் பற்றி டுவிட்டரில் கருத்திடுகிறார்.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8 ஆம் தேதியை தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அனுசரித்து சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. பருவமழையால் பல மாவட்டங்கள் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு, சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வெள்ள நிவாரணப் பணிக்காக அனைத்து துறையினர் 24 மணி நேர பணியில் ஈடுபட வேண்டும். மீட்பு பணிக்கு மத்திய அரசு வர வேண்டும். இந்து தீவிரவாதம் குறித்து அரசியலுக்கு வரும் முன்பே துணிச்சலாக வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசனின் வலிமையான மன உறுதியை வாழ்த்தி நெஞ்சார பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டம்
பின்னர் பாஜக மற்றும் அதிமுக அரசுகளைக் கண்டித்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்.கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, திமுக மாவட்ட துணைத் தலைவர் பூவை ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி சேஷன், தி.க. மாவட்ட தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.