திருப்பூர், நவ. 3 –
திருப்பூரில் விரைவாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையை அமைத்துத் தர வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கூறியுள்ளதாவது: திருப்பூரில் தற்போது இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.யில் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் குடும்பத்தினரையும் சேர்த்தால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. திருப்பூர் பகுதி கோவை மண்டலத்தின் மொத்த வருவாயில் கணிசமாக ஈட்டித் தருகிறது. தொழில் வளர்ச்சியால் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வருவாயும் மேலும் உயர வாய்ப்புள்ளது. தவிர, விடுபட்ட தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.

திருப்பூரைப் பொறுத்தவரை இ.எஸ்.ஐ.சார்பில் இரு மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்தகங்களில் போதிய மருத்துவர்கள், உதவியாளர்கள் இல்லை. அவசரம் என்றால் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நோயாளிகள் செல்ல வேண்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கோவை வந்த மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி ஒதுக்கப்படும் என்றார். ஆகவே, ஏற்கனவே திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட கையகப்படுத்தப்பட்ட இடத்தில், மேற்கூறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 100  படுக்கை வசதிகள் கொண்ட ஒரு பல்நோக்கு மருத்துவமனையை அமைக்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.