புதுதில்லி;
இமாச்சல பிரதேச மாநிலத் தேர்தலில், பாஜக-வும், காங்கிரசும் பெரும் கோடீஸ்வரர்களை வேட்பாளர்களாக களத்தில் இறக்கி விட்டுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளில், மொத்தம் 338 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், இவர்களில் 158 பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், பாஜக-வும், காங்கிரசும் பெரும் கோடீஸ்வரர்களை வேட்பாளராக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

68 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரசில் 59 பேர் கோடீஸ்வரர்கள். அதேபோல பாஜக 47 கோடீஸ்வர வேட்பாளர்களை இறக்கி விட்டுள்ளது.காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8 கோடியே 56 லட்சமாகவும், பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 5 கோடியே 31 லட்சமாகவும் உள்ளது. பாஜக வேட்பாளர் பல்வீர்சிங்கிடம் அதிகபட்சமாக ரூ. 90 கோடி சொத்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யாவிடம் ரூ. 84 கோடி சொத்து உள்ளது.சுயேச்சைகள் 112 பேர் போட்டியிடும் நிலையில், அவர்களிலும் 36 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.முதல்வர் வீரபத்ரசிங் உள்பட 5 பேர் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1 கோடி என்று தெரிவித்துள்ளனர். 71 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
வேட்பாளர்களில் 214 பேர் பட்டதாரிகள், 120 பேர் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள். ஒருவர் படிப்பறிவு இல்லாதவர். மொத்த வேட்பாளர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள்.

Leave A Reply

%d bloggers like this: