நந்திவரம் – கூடுவாஞ்சேரி பகுதியில் விடிய, விடியப் பெய்த மழையால், ஆபத்தான நிலையில் நந்திவரம்  ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திங்களன்று நள்ளிரவு முதல் கூடுவாஞ்சேரி – நந்திவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் நந்திவரம்  பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. கடந்த 2015 பெருமழையின் போதும் வர்தா புயலின் போது, பல இடங்களில் இந்த ஏரிக்கரை உடைந்ததால், நந்திவரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கின. ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தும், ரயில்வே சேவையும் தடைப்பட்டன. இதையடுத்து, ஏரிக்கரை தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் தற்போதும் ஏரி உடையும் அபாயம இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது கடந்த 2015ம் ஆண்டு மழையின் போது ஏரி உடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து  பல லட்சம்n மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. அதன் பிறகு ஏரியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் எந்த நேரத்திலும் ஏரி உடையும் நிலையில் உள்ளது. இன்னும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீர் வரத்து அதிகாரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நந்திவரம்  ஏரியை சீரமைக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.