அரியலூர்,

உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ் வழங்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் கிராமத்தை சேர்ந்த மெகருன்னிசா பேகம் கடந்த 1999 ஆம் ஆண்டு கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தார்.

அப்போது அக்கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் மற்றும் அவரது உதவியாளர் கணேசன் ஆகிய இருவரும் சான்றிதழ் வழங்க மெகருன்னிசா பேகத்திடன் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து மெகருன்னிசா பேகம் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவலர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார். பின்னர் காவலர்களின் அறிவுறுத்தலின் படி மெகருன்னிசா பேகம் ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டை சீனிவாசன் மற்றும் கணேசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை அடுத்து சீனிவாசன் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: