சென்னையில் திங்களன்றும் செவ்வாயன்று அதிகாலையும் பெய்த மழையால் நகரின் தாழ்வான பலபகுதிகளில் தண்ணீர்தேங்கியது. இதனால்  மக்கள் அவதிப்பட்டனர்.
பெரம்பூர் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழும் மழைத் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. அதன் காரணமாக பொதுமக்கள் மேம்பாலத்தில் ஏறிச் சென்றனர். அதன் அருகே ஸ்டீபன் சாலையில் அருகில் உள்ள ஓடை தண்ணீர் புகுந்து வெள்ளம்போல ஓடியது.வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகனப்போக்குவரத்து முடங்கியது.
ஜமாலியா பகுதியிலும் மழை தண்ணீர் முட்டு அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. டவுட்டனிலும் இதே நிலை காணப்பட்டது. வியாசர்பாடி கல்யாணபுரத்தில் சென்னை மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு திங்களன்று இரவு பெய்த பலத்த மழையால் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி பாலத்திலும் தண்ணீர் தேங்கியது. என்றாலும் பம்பு மூலம் அந்த தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. தென்சென்னையிலும் பல சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்து  போக்குவரத்து தாமதம் ஆவதால் பெரும்பாலானவர்கள் மெட்ரோ மற்றும் மின்சார ரயிலை நாடினார்கள். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கொரட்டூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. கீழ்த்தளத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறினர். அம்பத்தூர் பால்பண்ணையிலும் தண்ணீர் புகுந்தது. ராட்சத பம்பு செட்டுகளைக் கொண்டு அதை அகற்றினர்.
இதேபோல அம்பத்தூர் கறுக்கு பகுதியிலும்  நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பட்ரவாக்கம் பகுதியில் சுமார் 300 வீடுகளில் மழைநீர் புகுந்தது. கொரட்டூர், பட்ரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1000 வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் அங்கு குடிநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது. பட்ரவாக்கம் பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்குள்ள  சாலையைத் துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலையில் ராட்சத கிரேன் மூலம் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள ஏரிக்குச் செல்கிறது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரி- குளங்கள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை 30 சதவீதம் அதிகமாக பெய்ததால் பல மாவட்டங்களில் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடக்கத்திலேயே தீவிரமாகி விட்டதால் அனைத்து ஏரி-குளங்களும் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.