புதுதில்லி;
இந்தியாவின் உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான தொழில் மாநாடு துபாயில் நேற்று  நடைபெற்றது. இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி தில்லியிலிருந்தே வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றார்.

“இந்தியாவானது ஐக்கிய அரபு அமீரகத்துடன் சுமூகமான ஒரு உறவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது; உங்களது நாட்டின் பல்வேறு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துவருகின்றனர்.

பாரத்மாலா என்ற சாலையமைப்புத் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 8 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும், பிரதமர் மோடியின் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்றாகும்; பாரத்மாலா, சகர்மாலா ஆகிய இரண்டு மெகா திட்டங்களில் சுமார் ரூ. 24 லட்சம் கோடி அளவிற்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இவ்விரு திட்டங்களும் உள்நாட்டின் பழங்குடி கிராமங்கள், சுற்றுலாப் பகுதிகள், நாட்டின் எல்லைகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.எனவே, இத்திட்டங்களில் ரூ. 16 லட்சம் கோடி வரையில் முதலீட்டை ஈர்க்க விரும்புகிறோம். இதில் துறைமுகச் சாலை இணைப்புக்கு ரூ. 4 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் ஐக்கிய அரபு முதலீட்டாளர்கள் நிதியுதவி வழங்கலாம்”.இவ்வாறு நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: