திருப்பூர், அக்.30-
திருப்பூரில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையிட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம் வருமாறு: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பூமலூர் அருகேயுள்ள கிடாதுறை புதூர், ராசியண்ணன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்வி. இத்தம்பதியினர் அளித்த மனுவில், நான் விசைத்தறி வைத்து கூலிக்கு நெசவு செய்து வருகிறேன். எனது தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி, திருப்பூர், பல்லடம் சாலை, காட்டன் மார்க்கெட் எதிரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் சொத்து பத்திரத்தை ஈடாக வைத்து, ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கடனாக பெற்றேன்.

இதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி வரை பல தவணைகளில் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் வரைஅசலும் வட்டியுமாக செலுத்தியுள்ளேன். பணத்தை செலுத்தியவுடன் எனது பத்திர ஆவணத்தை திரும்பக் கேட்டபோது, அதிகப்படியான வட்டி கணக்கிட்டு, இனியும ரூ.16 லட்சம் கொடுத்தால் மட்டுமேபத்திர ஆவணத்தைத் திருப்பிக் கொடுப்பேன் என்கிறார் உரிமையாளர். மேலும், ஆள்களை வைத்து எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார். நான் தொழில் செய்வதையும் தடுக்க முற்பட்டு வருகிறார். இதுகுறித்து மங்கலம் போலீஸில் புகார் அளித்து, ஒப்புகைச் சீட்டும் காவல் துறையால் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நான் ஈடாக கொடுத்த ஆவணத்தை வைத்துக் கொண்டு, எனது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம், எனது உயிருக்கும், உடமைக்கும் தக்க பாதுகாப்பு அளித்து, புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, நிலத்தின் பத்திரத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பூரை அடுத்துள்ள மொய்யாண்டம்பாளையம், மஹாகணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராதாமணி (48). ஆட்சியரகத்தில் இவர் அளித்த மனுவில், கடந்த 1995-ம் ஆண்டு தன் குடும்ப தேவைக்காக தனியார் ஒருவரிடம் ரூபாய் 12, 000 கடன் பெற்றேன். அதற்காக மேற்கூறப்பட்ட முகவரியில் உள்ள என்னுடைய சொத்து பத்திரத்தின் மீது ஒப்பந்தமும் எழுதி கொடுத்தேன். வாங்கிய தொகைக்கு இதுவரை ரூ.6 ஆயிரம் வரை வட்டி செலுத்தியுள்ளேன். இந்நிலையில் எனக்கே தெரியாமல், என்னுடைய சொத்தை, கடந்த 1999-ஆம் ஆண்டு அந்த நபர், ஆள்மாறாட்டம் செய்து பொன்னுசாமி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இருவருடன் மேலும் 3 பேர் இந்த ஏமாற்று வேலைக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவரிடம் சென்று விபரம் கேட்டபோது, மேலும் ரூ.5 லட்சம் தனக்கு கொடுத்தால் தான் கிரயத்தை ரத்து செய்து கொடுப்பேன் என்று மிரட்டுகிறார். எனவே, என்னுடைய சொத்தை அபகரித்து விட்டு, கந்து வட்டி கேட்டு மிரட்டும் அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, எனக்கு சொந்தமான சொத்தை கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திருப்பூர், காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த பாலாமணி என்பவர்அளித்த புகாரில், எனக்கு திருப்பூர், வாரணாசிபாளையம் பகுதியில் ஏழரை சென்ட் வீட்டுடன் கூடிய நிலம் உள்ளது. திருப்பூர், வாவிபாளையத்தை சேர்ந்த ஒருவரிடம், கடந்த 2010-ஆம் ஆண்டு அதை அடமானமாக வைத்து, ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றேன். வட்டியு
டன் ரூ.3 லட்சம் கட்டி விட்டேன். ஆனால் அவர் சொத்து பத்திரத்தைத் தர மறுக்கிறார். மாறாக ரூ.16 லட்சம் பணம் கேட்கிறார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, சொத்து பத்திரத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: