சிவகங்கை;                                                                                                                                                                                   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த வேட்டங்குடிபட்டி அருகே கொள்ளுக்குடிபட்டியில் 17 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருகின்றன.இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர துவங்கின. பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகிலிருந்தும் 3ஆயிரம் பறவைகள் தற்போது வந்துள்ளன. இவை செப்டம்பர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் மட்டுமே தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, வொயிட் ஐ பீஸ், மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 17 வகையான பறவைகள் இங்கு வந்துள்ளன.
பறவைகளை காக்கும் மக்கள்
பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பதில் இக்கிராம மக்கள் தனிக்கவனம் எடுத்து செயல்படுகின்றனர்.அதாவது தீபாவளி அன்று வெடி,வெடி வெடித்தால் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் இக்கிராம மக்கள் தீபாவளி அன்று வெடி வெடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர். அதே போன்று சத்தம் வரக்கூடிய எந்த பழக்கத்தையும் இக்கிராம மக்கள் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு தியாகம் புரிந்துள்ளனர்.அதாவது கொட்டுமேளம் அடிப்பதைக்கூட நிறுத்திக் கொண்டுள்ளனர். ஒலிபெருக்கி, மேளதாளங்கள் தவிர்க்கப்படுகிறது. கொள்ளுக்குடிப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவள்ளி கூறும்போது, தீபாவளிக்கு வேட்டு வெடிக்க முடியவில்லையே என்கிற கவலை எங்கள் ஊர் இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு உள்ளது. பறவைகளை நேசிப்பதால் அவற்றுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தில் 40ஆண்டுகளுக்கு மேலாக எதற்கும் வெடிவெடிப்பதில்லை என்றார்.
சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கென அமைக்கப்பட்ட பூங்கா சேதமுற்றுள்ளது. பறவைகளை பார்ப்பதற்கு ஏதுவாக உயரமான மேடை உள்ளது. பயணிகள் விடுதி உள்ளது. பறவைகள், விலங்கினங்கள் குறித்து வீடியோ மூலம் விளக்கப்படுகின்றன. பள்ளி மாணவ, மணவிகள் இங்கு வந்து செல்வதற்கு பேருந்து வசதி வேண்டும். பறவைகள் சரணாலயம் தொடர்பாக யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தொலைபேசி எண்ணுடன் தகவல் எழுதி வைக்கவேண்டும் என்கிறார் லெட்சுமணன். ப்ளஸ் 2 மாணவர்கள் லெட்சுமணன், மூர்த்தி, ராமமூர்த்தி, இனியன் ஆகியோர் கூறுகையில், வனத்துறையினர் பறவைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையோடு  செயல்படுகிறார்கள்.அதேபோன்று பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பார்வையாளர்கள் உயர்கோபுரத்தில் ஏறி பார்ப்பதற்கான ஏற்பாடு சிறப்பாக உள்ளது. என தெரிவித்தனர்.
-ஜே.ராமச்சந்திரன், போட்டோ ராஜகோபால் சிவகங்கை.

Leave a Reply

You must be logged in to post a comment.