பொள்ளாச்சி, அக்.26-
டெங்கு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் டெங்கு கொசுவை கட்டுப்பபடுத்துவதற்காக ஒப்பந்த பணியில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு கொசுக்கள் ஒழிப்புக்கு மருந்து தெளிப்பது மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்து
வது, சுகாதார பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு தினமும் ரூ.185 கூலி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை இவர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதனால் தங்களது வாழவாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வியாழனன்று ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த பெண் பணியாளர் முருகாத்தாள் கூறுகையில்:- மூன்று மாதங்களுக்கு மேலாக எங்களுக்கு கூலி வழங்காததால் நாங்கள் வட்டிக்கு கடன் வாங்கி குடும்ப செலவுகள் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் தரவில்லை. எங்களின் வீட்டில் அடுப்பு எரிவதற்காக தான் நாங்கள் கூலி வேலைக்கு வருகிறோம். ஆனால் வந்த இடத்தில் இப்படி நடப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. ஆகவே, எங்களுக்கு சேரவேண்டிய சம்பள பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருதினங்களுக்குள் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.