அக்டோபர் 29ஆம் தேதி மாலை திருப்பூர் மாநகருக்கு வருவோர் புதிய நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். அன்றைய தினம் சிவப்புச் சட்டை, காக்கி கால்சட்டை சீருடை அணிந்த செந்தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மாநகரின் சாலைகளில் பேரணியாகச் செல்ல இருக்கின்றனர்.

யுகங்களின் வரலாற்றுத் தத்துவத்தைப் படைத்த மாமேதை கார்ல்மார்க்ஸின் 200ஆவது பிறந்த ஆண்டு, மனிதகுல வரலாற்றைப் புரட்டிப் போட்ட சோவியத் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு மற்றும் தமிழக உழைப்பாளி மக்களின் விடிவெள்ளியாக ஒளிவீசும் தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்குவது ஆகிய மூன்று பெரும் நிகழ்வுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் அக்.29இல் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தேசத்தை பின்னுக்கு இழுக்கத் துடிக்கும் காவிக் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

உழைப்போரின் அரசியல் அதிகாரமே உலகத்தை உய்விக்க முடியும் என்ற தத்துவ உண்மையை உரக்கச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ். அந்த தத்துவ உண்மையை மாமேதை லெனின் தலைமையில் நடைமுறைப்படுத்தி 20ஆம் நூற்றாண்டில் பூமியின் வரலாற்றை சிவப்பு வண்ணம் பூசச் செய்தது சோவியத் ரஷ்யப் புரட்சி. இந்த வரலாறு உண்மைகளை கொண்டாடுவதற்கு சாலப்பொருத்தமான இடமாக திருப்பூர் திகழ்கிறது என்றால் மிகையில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி வரும் உழைப்பாளர் கூட்டம் திருப்பூரில் பல லட்சம் பேராய்த் திரண்டிருக்கிறது. கொண்டாட்டம் என்பது கூடிக் கலையும் வெறும் சம்பவமாக இருக்கக் கூடாது, அந்த கொண்டாட்டமே ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சரித்திரமாக மாற வேண்டும் என்பதற்கேற்ப இந்நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து செந்தொண்டர் பேரணி தொடங்குகிறது. இப்பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். வேறு யாருக்கும் அனுமதி இல்லை. மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக டவுன்ஹால் மைதானத்தில் செந்தொண்டர் பேரணி நிறைவடைகிறது. இங்கு சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் சிறப்பாக கம்யூனிஸ மூலவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸின் தொகுப்பு நூல் பாரதி புத்தகாலயம் வெளியீடாக இங்கே வெளியிடப்படுகிறது.

செங்கொடி இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருக்கும் திருப்பூர் மாநகரில் இதற்கு முன்பும் செந்தொண்டர் அணிவகுப்புகள் பல முறை நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலிடம் இது குறித்து கேட்டபோது, “சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1978ஆம் ஆண்டுவாக்கில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்பு மாநாட்டில் செந்தொண்டர் அணிவகுப்பில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு செந்தொண்டர் அணிவகுப்பு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.” என்றார். முன்னாள் ராணுவ வீரர் மிலிட்டரி பொன்னுசாமி இங்கு சுமார் 30 ஆண்டு காலமாக செந்தொண்டர் பயற்சி அளித்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, “1986ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று செந்தொண்டர் அணிவகுப்பு கட்சி அலுவலகத்தில் தொடங்கி தாராபுரம் சாலை கோட்டை மாரியம்மன் கோயில் அருகே நிறைவடையும். இதில் பங்கேற்கும் செந்தொண்டர்களின் அணிவகுப்பின் கம்பீரத்தையும், நேர்த்தியையும் காண்பதற்கே சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று பார்ப்பார்கள்!” என்றார்.

உழைப்பாளர்களின் நகரமான திருப்பூர் செங்கொடி இயக்கத்தின் வலுவான கோட்டை என்பதை பறைசாற்றும் விதமாக செந்தொண்டர் அணி வெகு சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது அதற்கு முன்னோட்டமாக திருப்பூர் மாநகரில் கம்பீரமான செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளின்போது செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வுகளில் இதுவரை அதிகபட்சம் 500 பேர் வரை பங்கேற்றிருக்கின்றனர் என்று தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர் செந்தொண்டர் அணியைச் சேர்ந்தோர்.

ஆனால் அக்டோபர் 29இல் திருப்பூரில் செந்தொண்டர் பேரணியில் ஆயிரத்து ஐநூறு பேரை பங்கேற்கச் செய்வதென்று கட்சியின் மாவட்டக்குழு தீர்மானித்தது. ஆனால் இந்த நிகழ்வு நடத்தப்படுவது பற்றி திருப்பூரின் கிளைகள்தோறும் தகவலைக் கொண்டு சென்றபோது, “இதற்குத்தான் காத்திருந்தோம்!” என உற்சாகத் துள்ளலோடு நான், நீ என தோழர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதில் பங்கேற்க பெயர் கொடுத்து வருகின்றனர், எனவே திட்டமிட்ட எண்ணிக்கையை விட ஆயிரக்கணக்கில் தோழர்கள் இதில் கூடுதலாகப் பங்கேற்பார்கள் என்றார் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ்.

அண்மைக் காலமாக திருப்பூரில், வானத்தில் சூழ்ந்த கருமேகம் போல காவிக் கூட்டம் தலையெடுத்து இந்நகரின் வீரஞ்செறிந்த தொழிலாளி வர்க்க அரசியல் பாரம்பரியத்திற்கு எதிராக தனது சகிப்புத்தன்மையற்ற சூழ்ச்சிகளை அரங்கேற்றி சீர்குலைக்க நினைக்கிறது. அதற்கு ஒருபோதும் திருப்பூர் அடிபணியாது என்பதை பறைசாற்றுவதாக இந்த செந்தொண்டர் பேரணி அமையும் என தோழர்கள் உறுதி கூறுகின்றனர்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்துக்கு அப்போதைய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி வந்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில் அவரது தொண்டை ரணமாகி குரல் கரகரத்துப் போயிருந்தது. டவுன்ஹால் அரங்கில் அவர் பேசத் தொடங்கினார். “இந்தியாவின் ஒட்டுமொத்த தேசபக்தர்கள் சார்பாக நான், உழைப்பாளர் நகரமான இந்த திருப்பூரில் உங்கள் முன்பாக நிற்கிறேன். இன்று மதவெறி பிடித்த ஜனநாயக விரோத சக்திகளிடம் இருந்து (அப்போது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 6 ஆண்டு ஆட்சி நடைபெற்று ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.) நாட்டைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் வளமான முற்போக்கு, மதச்சார்பற்ற பாரம்பரியம் எப்போதும் முன்னோடியாக, வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளது. அந்த பாரம்பரியத்துடன் மதவெறி சக்திகளை இந்த தேர்தலில் முறியடியுங்கள்!” என சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார். அவரது வேண்டுகோள் வீண்போகவில்லை. 2004 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி தூக்கி வீசப்பட்டது வரலாற்று உண்மையாக நிலைபெற்றிருக்கிறது.

இன்று அதைவிட அச்சுறுத்தலான மிக மோசமான ஒற்றை சர்வாதிகார இந்துத்துவ கூட்டம் அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது. குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளைக் குறி வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுத்து, காவிக் கூட்டத்தை முறியடித்து, செழுமையான தனது பாரம்பரியத்துடன் செங்கொடி இயக்கம் புதிய வரலாறு படைக்கப் போவது உறுதி. அதற்கு நம்பிக்கையளிக்கும் துவக்கமாக இந்த செந்தொண்டர் பேரணி திகழும். அதில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்க இருப்பது ஒரு வரலாற்றுப் பொருத்தமன்றோ! நீங்களும் வாருங்கள். திருப்பூரை… அல்ல, அல்ல.. சிகப்பூரை காண்பதற்கு!

Leave a Reply

You must be logged in to post a comment.