===எஸ்.நவமணி===
கருத்தரங்கை தொடர்ந்து தெற்குவீதியில் கலைஇலக்கிய இரவு-2017 அரங்கேறியது. கொட்டிதீர்த்த கனமழையை தொடர்ந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கலைபேரணியை துவக்கி வைக்க களைகட்ட துவங்கியது கலைஇரவு. தஞ்சை ரெட்டிப்பாளையம் ரெங்கராஜன் பறையாட்டக்குழுவின் அதிரடி இசை, எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், கருப்பு கருணா ஆகியோரின் உரைவீச்சு கரிசல் குயில் கிருஷ்ணசாமி, வைகறை கோவிந்தன் ஆகியோரின் கானமழை.

கவிஞர் நவகவியின் கருத்தாழமிக்க கவிதைகள் புதுகை பூபாளம் கலைக்குழுவின் நாட்டுநடப்பு நையாண்டி, கட்டுரையாளர் ஐ.வி.நாகராஜன் எழுதிய மலரட்டும் மார்க்சியம் நூல் வெளியீடு என வழக்கமான உற்சாகத்தோடும் ஆழமான கேள்விகளை பார்வையாளர்களிடம் எழுப்பி வாழ்வின் திசைகாட்டி கலை இரவு நிறைவு பெற்றது.

இயக்குநர் சிவக்குமார்
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்-15) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருவாரூர் தைலம்மை திரையரங்கில் சோவியத் திரைப்படங்களின் திரைப்படவிழா பார்வையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆவலோடும் துவங்கியது. சங்கத்தின் திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் கருப்பு கருணா விழாவிற்கு தலைமையேற்றார்.எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் திரைப்பட விழாவின் நோக்கம் குறித்துபேசி தொடங்கி வைத்தார். இயக்குநர் சிவக்குமார் திரைப்படங்களின் கருத்துக்குறித்தும் உருவான விதம் குறித்தும் அப்படங்கள் நம்முள் விதைக்கயிருக்கும் புதிய சிந்தனைகுறித்தும் விளக்கினார். சங்கத்தின் திரைஇயக்க உபக்குழுவின் ஒருங்கிணைப்பின் விழா நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

திருவாரூரில் முதல் முறையாக நடைபெற்ற இந்த விழா புதிய சிந்தனைகளை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்தது, ஆச்சரியத்தில் முழ்கடித்தது. படப்பிடிப்பு ஒளிப்பதிவு கேமரா கோணங்கள் மார்க்சிய அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்ட விதம், குடும்ப உறவுகளின் நுட்பமான உணர்வுகள் காதலர்கள் கடைபிடித்த கண்ணியம் அதற்குள் இருந்த நாகரீகமான காதல் வெளிப்பாடுகள் போன்ற அனைத்தும் இப்படியெல்லாம் சினிமா எடுக்கமுடியும் என்கிறபோது ஏன் நம் தமிழ்சினிமா இப்படி இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை.

திரைப்படங்கள்;                                                                                                                                                                          இந்த திரைப்படவிழாவின் போது 1925ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் வெளியான Battleship potemkin, 1960 ஆம் ஆண்டு வெளியான Letter never Sent, 1985ஆம் ஆண்டு வெளியான Come and See சோவியத் யூனியம் பிளவுபட்ட பிறகு 2014ஆம் ஆண்டு ரஷ்யாவில் உருவான The fool ஆகிய நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ரஷ்ய மொழியில் உரையாடல்கள் அமைந்திருந்தபோதும் படங்களை உருவாக்கியிருந்த விதம் படம் பார்த்தவர்களுக்கிடையில் மொழி ஒரு தடையாக இல்லை. ரஷ்ய புரட்சிக்கு முன்பாக 1905 ஆம் ஆண்டு ஜார் மன்னராட்சி காலத்தில் நடைபெற்ற கப்பல்படை மாலுமிகளின் எழுச்சி குறித்த கதைதான் பட்டியலில் உள்ள முதல்படமாகும். இந்த போராட்டம் தான் ரஷ்ய புரட்சியின் முன்னோடி என்பது வரலாறு. இந்திய சுதந்திரபோராட்டத்தின்போது நடைபெற்ற கப்பற்படை எழுச்சியின் ஒத்தது இந்த கதை. சரியான உணவு தரப்படவில்லை என்பதில் தொடங்கி மாலுமிக்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் மோதலின் உச்சமாக மாலுமி ஒருவர் கொல்லப்பட கப்பற்படை அதிகாரிகளும் பழிதீர்க்கப்பட அதிகாலையில் விபரம் தெரிந்து இறந்துபோன மாலுமிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து வருவது பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் உச்சத்தில் மக்களிடையே ஜார் மன்னனுக்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிராகவும் கிளர்ச்சி தீ உருவாகிறது.

இரண்டாவது படம் காதலை மிகவும் கலை நயத்தோடும் நாகரீகத்தோடும் உணர்வுகளோடும் உள்ளதாக பின்னப்பட்டுள்ளது. போருக்கு செல்லும் தன்னுடைய காதலன் இறந்துபோக கட்டாயத்தின்பேரில் வேறொருவருக்கு மனைவியாகும் கதாநாயகி தனது சலனமற்ற மனதில் காதலனையே நினைத்து வாழ்கிறார்.ஒரு கட்டத்தில் ஆபத்திலிருந்து ஒரு குழந்தையை மீட்க அந்த குழந்தையின் பெயர் தனது காதலலின் பெயராக இருக்கவே குழந்தையை தானே வளர்க்கிறார். போர் முடிந்து திரும்பும் எஞ்சிய போர் வீரர்களை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பதும் எழுச்சிமிக்க காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் ஸ்டீபன் என்ற போர்வீரன் (ஸ்டாலின் காலத்துப்படம்) ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்துபோன ஒவ்வொருவரும் நம்முடைய உறவினர்தான் என்று கூறுவதை கேட்டு மிகுந்த சோகத்தில் இருந்த கதாநாயகி போரில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது காதலனுக்காக கொண்டுவந்த பூங்கொத்துக்களை கொடுத்து இயல்புநிலைக்கு திரும்புகிறார்.

இரண்டாம் உலகப்போர்
மூன்றாவதாக திரையிடப்பட்ட படம் பாசிச ஹிட்லர்  நடத்திய இரண்டாம் உலகப்போர் குறித்த கொடூரங்கள் அடங்கியது. இரண்டாம் உலகப்போரில் மிகவும் பாதிக்கப்பட்ட ரஷ்யாவின் ஒருபகுதியாக இருந்த பைலோரஷ்யாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் எவ்வளவு கொடுமையானது; இனி ஒரு யுத்தம் இந்த பூவூலகில் நடக்கவே கூடாது என்ற எண்ணத்தை நமக்கு உருவாக்குகிறது.இந்த போரின்போது 625 கிராமங்களை ஒட்டுமொத்தமாக அழித்து அத்தனை மக்களையும் கொன்றுகுவித்து கோரத்தாண்டவம் ஆடி பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அட்டகாசம் செய்து நாஜிப்படைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் காட்சிகள் தத்துரூபவமாக எடுக்கப்பட்டிருப்பதால் பார்ப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்குகிறது. அந்த போரினை நேரில் கண்டு பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் மூலம் விரியும் இந்த கதை 2 ½ மணிநேர திரைப்படமாக ஒடுகிறது.

தற்போதைய ரஷ்யாவில் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான The fool பிளவுபட்ட சோவியத் ரஷ்யாவிற்கு பிறகு தற்போதைய ரஷ்யா எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மக்கள் சோவியத் ரஷ்யா உருவாவதற்கு முன்பாக தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புகிற காட்சிகளை உள்ளடக்கியதாக இந்தப்படம் உள்ளது. மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோவியத் ரஷ்யா சிந்தனை உருவாவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்த திரைப்பட விழா என்பது ஒட்டுமொத்த உலகப்பந்தையும் சோஷலிசத்தின்கீழ் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைவரும் எடுக்கவேண்டிய கட்டாயத்தை எடுத்துரைக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ந்து வரும் இந்த சிந்தனை பூமிப்பந்தில் அமைதியை உருவாக்குவதோடு அனைத்து மக்களுக்கான வாழ்க்கையை கண்டிப்பாக வழங்கும் அதற்கு ஆதார சுருதியாக மார்க்சியம் என்கிற விஞ்ஞானம். விஞ்ஞானம் மட்டுமே உண்மையானது கம்யூனிசம் என்பதும் அதுதான்.

மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து இந்த திசைவெளி நோக்கி நடப்பார்கள் என்பது நிச்சயம்.
ஒவ்வொரு நாளும் வந்துசெல்கிறது. ஏதோ விடிகிறது என்ன தோன்றுகிற நிலையில் வாழ்க்கை உள்ளது. பல்வேறு நெருக்கடிக்கு இடையில் வாழக்கூடிய மக்கள் இன்றைய அரசியல் போக்கை முகசுளிப்போடு வாழ்கிறார். இத்தகைய பின்னணியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கம் இந்த இரண்டு நாட்களில் எடுத்த முயற்சி இந்த நாட்களை அர்த்தமுள்ள நாட்களாகவும் இதயம் நிறைந்த நாட்களாகவும் மாற்றியது. இதற்காக கடந்த ஒருமாத காலமாக கடுமையாக உழைத்த மாநில மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலாளர் பகவன்ராஜ் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் அனைவரும் மிகவும்  போற்றுதலுக்குரியவர்கள்.

Leave A Reply

%d bloggers like this: